லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்: 3-வது நாளாக நீடிப்பு டெல்லியில் இன்று பேச்சுவார்த்தை


லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்: 3-வது நாளாக நீடிப்பு டெல்லியில் இன்று பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 20 Jun 2018 10:15 PM GMT (Updated: 20 Jun 2018 7:07 PM GMT)

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் 3-வது நாளாக நேற்றும் நீடித்தது.

சென்னை, 

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் 3-வது நாளாக நேற்றும் நீடித்தது. டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) அதிகாரிகளுடன், சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர்.

தினசரி டீசல் விலை உயர்வை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய தரைவழி போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் நாடு முழுவதும் கடந்த 18-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

இதில் தமிழகத்தில் தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனமும், அதனை சார்ந்த 40 சங்கங்களை சேர்ந்த லாரி உரிமையாளர்களும் பங்கு பெற்றுள்ளனர். நேற்று 3-வது நாளாக வேலைநிறுத்தம் நீடித்தது.

முதல் நாளில் பாதிப்பு இல்லை என்றாலும், நேற்று முன்தினமும், நேற்றும் நடந்த வேலைநிறுத்தத்தால் பல இடங்களில் பொருட்கள் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் அகில இந்திய தரைவழி போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளும், அதனுடன் கைகோர்த்து இருக்கும் மற்ற சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் டெல்லியில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் இன்று(வியாழக்கிழமை) பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் சுகுமார் கூறுகையில், ‘3-வது நாளாக வேலைநிறுத்தம் நீடிக்கிறது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. நாளை (இன்று) முதல் தண்ணீர், பால் லாரி உரிமையாளர்களும் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் கைகோர்க்க இருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர். டெல்லி பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாவிட்டால் சங்கத்தினர் சென்னையில் நாளை(இன்று) கூடி அடுத்தகட்ட நகர்வு குறித்து சில முக்கிய முடிவுகளையும் எடுப்போம்’ என்றார்.

Next Story