டாஸ்மாக் கடைகளில் மது குடித்த 4 பேர் பரிதாப சாவு 8 பேருக்கு தீவிர சிகிச்சை


டாஸ்மாக் கடைகளில் மது குடித்த 4 பேர் பரிதாப சாவு 8 பேருக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 24 Jun 2018 10:15 PM GMT (Updated: 24 Jun 2018 7:51 PM GMT)

சிவகாசியில் 2 டாஸ்மாக் கடைகளில் மது வாங்கிக்குடித்த 4 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 8 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விருதுநகர், 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி லிங்காபுரம் காலனியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இங்கு நேற்று மதியம் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் சிலர் மது பாட்டில்களை வாங்கினர். அவர்கள் சிறுகுளம் கண்மாய் கரை பகுதிக்கு சென்று ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர். மது குடித்த சில நிமிடங்களிலேயே காமராஜர் காலனியை சேர்ந்த கணேசன் (வயது 21) வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதைப் பார்த்ததும் மற்றவர்கள் பயந்துபோய் கணேசனின் தம்பி சக்திவேலுக்கு தகவல் கொடுத்தனர்.

அவர் அங்கு வந்து சேருவதற்குள் மதுகுடித்த மேலும் 3 பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தனர். அனைவரையும் சக்திவேல் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றார். அங்கு கணேசன், சையது இப்ராகிம்ஷா (22), கவுதம் (15) ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

கணேசனுடன் சேர்ந்து மது குடித்த அய்யப்பன் (22), ஜனார்த்தனன் (13), சரவணகுமார் (23), அரிகரன் என்கிற அந்தோணி (22) ஆகியோரும் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். அவர்களும் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அந்தோணி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மற்ற மூவரும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

3 பேர் உயிரிழந்ததால் அந்த பகுதி முழுவதுமே பரபரப்பு உருவானது. சிகிச்சை பெற்று வரும் அய்யப்பனின் அண்ணன் முருகன் (27) தனது வீட்டில் சுருண்டு விழுந்து இறந்துகிடந்தார். இதனால் அவரும் நண்பர்களுடன் சென்று மது அருந்தியிருப்பது தெரியவந்தது. இதனால் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

இதற்கிடையே சிவகாசி பராசக்தி காலனியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கிக்குடித்த ராஜாமுகமது (60), கருப்பையா (62), சிவகுமார் (28), கருப்பசாமி (33) ஆகியோரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். இவர்களில் கருப்பசாமியை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மற்ற மூவருக்கும் சிவகாசியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிவகாசியில் 2 கடைகளில் மது வாங்கி குடித்திருப்போர் பாதிக்கப்பட்டிருப்பதால் காலாவதியான மது அங்கு விற்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்று தீவிர விசாரணை நடந்துவருகிறது.

விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் கூறும்போது, ‘இதுதொடர்பாக விசாரணை நடத்த 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மதுவில் யாரேனும் திட்டமிட்டு விஷத்தை கலந்தார்களா? அல்லது குடித்தவர்களே மதுவில் போதைக்காக வேறு ஏதேனும் கலந்தார்களா? என்றும் விசாரணை நடத்திவருகிறோம். பாதிப்புக்கு காரணமான மதுவை சேகரித்து ஆய்வுக்கும் அனுப்பியிருக்கிறோம்’ என்றார்.

Next Story