தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் அனைத்து ரசாயனங்களையும் அகற்றும் பணி தொடங்கியது கலெக்டர் பேட்டி


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் அனைத்து ரசாயனங்களையும் அகற்றும் பணி தொடங்கியது கலெக்டர் பேட்டி
x
தினத்தந்தி 2 July 2018 11:23 PM GMT (Updated: 2018-07-03T04:53:27+05:30)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள அனைத்து ரசாயனங்களையும் அகற்றும் பணி தொடங்கியதாக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்திய தமிழக அரசின் உயர்மட்டக்குழு ஆலையில் உள்ள அனைத்து ரசாயனங்களையும் உடனடியாக அகற்ற வேண்டும் என அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. ஸ்டெர்லைட் ஆலையில் கந்தகஅமிலம், பாஸ்பாரிக் அமிலம், எரிவாயு(எல்.பி.ஜி.), டீசல், தாமிர தாது, ஜிப்சம், திரவ ஆக்சிஜன், திரவ நைட்ரஜன் உள்ளிட்ட ரசாயனங்கள் உள்ளன.

இந்த ரசாயனங்களை அகற்றுவதற்காக மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதில் உதவி கலெக்டர் பிரசாந்த், மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ், மாசு கட்டுப்பாட்டு வாரிய என்ஜினீயர் லிவிங்ஸ்டன் மற்றும் தீயணைப்பு துறை, தொழிற்சாலை பாதுகாப்பு அலுவலர், மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உள்ளனர்.

இந்த குழுவினர் ஆலைக்கு சென்று ரசாயனங்களை அகற்றுவதற்கு தேவையான பம்பு, டேங்கர் லாரிகள் உள்ளிட்டவைகளை ஏற்பாடு செய்து இன்று (அதாவது நேற்று) ரசாயனங்களை அகற்றும் பணியை தொடங்கி உள்ளனர். இந்த பணிக்கு டீசல் ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அடுத்த 30 நாட்களில் இந்த பணிகள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதில் ஜிப்சம் மட்டும் அதிக அளவில் இருப்பதால் கூடுதல் நாட்கள் ஆகலாம்.

இங்கிருந்து வெளியேற்றப்படும் ரசாயனங்கள் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மூலம் அவர்களிடம் இருந்து ஏற்கனவே பொருட்களை வாங்கும் நிறுவனத்துக்கு அனுப்பப்பட உள்ளது. இதற்கான செலவுகளை ஸ்டெர்லைட் நிறுவனம் ஏற்றுக்கொள்ளும்.

மேலும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மே மாதம் 22-ந் தேதி நடந்த கலவரத்தில் மொத்தம் 118 பேர் காயம் அடைந்தனர். 43 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டு உள்ளது. லேசான காயம் அடைந்தவர்களில் 52 பேருக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டு உள்ளது.

துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் இறந்த 13 பேரின் உறவினருக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்து உள்ளோம். எந்தெந்த துறையில் காலிப்பணியிடங்கள் உள்ளது என்ற விவரங்களும் தெரிவித்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து முதற்கட்டமாக கந்தக அமிலம் அகற்றும் பணி நேற்று தொடங்கியது. 6 டேங்கர் லாரிகள் மூலம் 120 டன் கந்தக அமிலம் அகற்றப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் முழுவீச்சில் ரசாயனங்கள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 

Next Story