நிர்ணயிக்கப்பட்ட கால பணி முறையை ரத்து செய்ய வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


நிர்ணயிக்கப்பட்ட கால பணி முறையை ரத்து செய்ய வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 July 2018 9:04 PM GMT (Updated: 2018-07-06T02:34:10+05:30)

தொழிலாளர்கள் உரிமைகளை பறிக்கும் வகையில் நிர்ணயிக்கப்பட்ட கால பணி முறையை ரத்து செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தொழிலாளர் நலச் சட்டங்கள் என்ற பெயரில் மத்திய அரசு உருவாக்கும் புதிய சட்டங்களும், சட்டத் திருத்தங்களும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பதாகவே அமைந்திருக்கின்றன.

அந்த வகையில் மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள நிர்ணயிக்கப்பட்ட கால பணி என்ற தத்துவம், அனைத்து வகை தொழிலாளர்களின் நிரந்தர பணி உரிமையை அப்பட்டமாக பறிக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

நிர்ணயிக்கப்பட்ட கால பணிமுறையை அறிமுகம் செய்திருப்பதன் மூலம் பணியாளர்களை தேவையான காலத்திற்கு மட்டும் வேலைக்கு எடுத்துக்கொண்டு வேலை முடிந்ததும் வீட்டுக்கு அனுப்பி வைக்க முடியும். இதனால் அவர்களுக்கு ஊதிய உயர்வு, பணிக்கொடை, ஓய்வூதியம் உள்ளிட்ட எந்த உரிமைகளும் வழங்கத் தேவையில்லை.

ஒரு தொழிற்சாலையில் ஒருவர் 3 மாதங்களுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டிருந்தால் அந்தக்காலம் முடிந்த பின்னர், அவருக்கு எந்த சலுகையும் வழங்காமல் அவரை பணியிலிருந்து விடுவிக்க முடியும்.

ஓர் அரசு தொழில் நிறுவனங்களுக்கும், தொழிலாளர்களுக்கும் பாலமாக இருக்க வேண்டுமே தவிர, தொழில் நிறுவனங்களுடன் இணைந்து தொழிலாளர்களை ஒழிக்கும் கருவியாக மாறிவிடக்கூடாது. எனவே, மிகவும் ஆபத்தான நிர்ணயிக்கப்பட்ட கால பணிமுறையை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story