தமிழகத்தில் ஜி.எஸ்.டி. மூலம் ரூ.60 ஆயிரம் கோடி வருவாய் அதிகாரி பேட்டி


தமிழகத்தில் ஜி.எஸ்.டி. மூலம் ரூ.60 ஆயிரம் கோடி வருவாய் அதிகாரி பேட்டி
x
தினத்தந்தி 6 July 2018 10:30 PM GMT (Updated: 6 July 2018 9:44 PM GMT)

ஜி.எஸ்.டி. மூலம் தமிழகத்துக்கு கடந்த 11 மாத காலத்தில் 60 ஆயிரத்து 430 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

சென்னை,

ஜி.எஸ்.டி.(சரக்கு மற்றும் சேவை வரி) நடைமுறைக்கு வந்து ஓர்ஆண்டு நிறைவடைந்ததையொட்டி ஜி.எஸ்.டி மற்றும் மத்திய கலால் வரித்துறை சார்பில் கடந்த 1-ந்தேதி முதல் நேற்று வரை வார விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அதிகாரிகள், ஊழியர்களுக்கு இடையே விளையாட்டு போட்டிகள், வர்த்தகம் மற்றும் தொழில் ரீதியிலான கருத்தரங்கங்கள், பள்ளி மாணவர்களிடையே ஜி.எஸ்.டி. குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

விழாவின் கடைசி நாளான நேற்று ஜி.எஸ்.டி மற்றும் மத்திய கலால் வரித்துறையின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல முதன்மை தலைமை கமிஷனர் சி.பி.ராவ் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜி.எஸ்.டி. வரி நடைமுறைக்கு வந்த பிறகு பல்வேறு மாற்றங்கள் அடைந்துள்ளது. ஜி.எஸ்.டி.யின் கீழ் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 80 ஆயிரத்து 497 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 3 லட்சத்து 72 ஆயிரத்து 697 பேர் புதிதாக ஜி.எஸ்.டி. பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு பின் கடந்த 2017 ஜூலை மாதம் முதல் கடந்த மார்ச் மாதம் வரையிலான 9 மாத காலத்தில் மாநில அரசுக்கு 26 ஆயிரத்து 227 கோடி ரூபாயும், மத்திய அரசுக்கு 24 ஆயிரத்து 745 கோடி ரூபாயும் என மொத்தத்தில் 50 ஆயிரத்து 972 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து உள்ளது. மேலும் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் 9 ஆயிரத்து 458 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து உள்ளது. அந்தவகையில் மொத்தம் 60 ஆயிரத்து 430 கோடி வருவாய் கிடைத்து இருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரை ஏற்றுமதியாளர்களின் 5 ஆயிரத்து 157 விண்ணப்பங்களுக்கு 2 ஆயிரத்து 620 கோடி ரூபாய் திருப்புத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜி.எஸ்.டி மற்றும் மத்திய கலால் வரித்துறை தென் சென்னை கமிஷனர் கே.எம்.ரவிச்சந்திரன் கூறியதாவது:-

மக்களின் அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது. குடிசைச்தொழில் மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கடலை மிட்டாயும் உற்பத்தி பொருளாக இருப்பதால் அதற்கும் 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு வரி விலக்கு அளிப்பது குறித்து ஜி.எஸ்.டி. கவுன்சில் தான் முடிவு செய்யும்.

கடலை மிட்டாய் மீதான வரி என்பது எல்லோருக்கும் பொருந்தாது. முன்பு ஆண்டு உற்பத்தி ரூ.10 லட்சத்துக்கு அதிகமானவர்கள் வரி செலுத்த வேண்டும். தற்போது ஜி.எஸ்.டி.யில் இந்த உச்சவரம் ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே பெரும்பாலான கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள் வரி செலுத்த வேண்டியது இல்லை. 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக உற்பத்தி செய்யும் ஒரு சில உற்பத்தியாளர்களே 5 சதவீத வரி செலுத்த வேண்டி உள்ளது.

தமிழகத்தில் ஓட்டல்களில் ஜி.எஸ்.டி.க்கு பின் அதிக அளவில் பணம் வசூலிப்பதாக புகார்கள் நிறைய வருகிறது. புகார்களின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். ஜி.எஸ்.டி. வரி முறைகேடுகளை தடுப்பதற்கு என மாவட்டம் தோறும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் குழு அமைத்து உள்ளோம். ஜி.எஸ்.டி.க்கு பிறகு விலையேற்றம் எதுவும் இல்லை. ஜி.எஸ்.டி.க்கு பின் தமிழகத்தின் வரி வருவாய் 7 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது ஜி.எஸ்.டி மற்றும் மத்திய கலால் வரித்துறை வட சென்னை கமிஷனர் எம்.ஸ்ரீதர் ரெட்டி, சென்னை புறநகர் கமிஷனர் ஜி.ரவீந்தரநாத் மற்றும் இணை கமிஷனர் மானச கங்கோத்ரி ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story