திருப்போரூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை


திருப்போரூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
x
தினத்தந்தி 6 July 2018 10:25 PM GMT (Updated: 6 July 2018 10:25 PM GMT)

தமிழகத்திலேயே அதிக வருவாய் ஈட்டும் திருப்போரூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

திருப்போரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் பத்திரப்பதிவு அலுவலகம் தான் தமிழகத்திலேயே அதிக வருவாய் ஈட்டும் பத்திரப்பதிவு அலுவலகமாக உள்ளது. இங்கு அதிக அளவு பத்திரப்பதிவு நடைபெறுவதால் முறைகேடுகள் நடப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்தது. மேலும் குறிப்பிட்ட நேரத்திற்கு மேலாக இரவு 8 மணி வரை பத்திரப்பதிவு நடைபெறுவதாகவும் புரோக்கர்கள் நடமாட்டம் அதிக அளவில் இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இதைத்தொடர்ந்து அந்த அலுவலகத்தில் நடைபெறும் முறைகேட்டை கண்காணிக்க ஆலந்தூர் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு லவக்குமார் தலைமையில் 4 போலீசார் கடந்த ஒருவார காலமாக மாறுவேடத்தில் பத்திரப்பதிவு செய்வது போல் அலுவலகத்தில் நடைபெறும் முறைகேட்டை கண்காணித்தனர்.

அப்போது குறிப்பிட்ட அதிகாரி ஒருவரிடம் ரூ.10 ஆயிரம் கொடுத்தால் உடனடியாக பத்திரப்பதிவு செய்து கொடுக்கப்படும் என்பது தெளிவானது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை 5 மணி அளவில் மாவட்ட ஆய்வு குழு அலுவலர் மூர்த்தி தலைமையில் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு லவக்குமார் மற்றும் 5 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் அதிரடியாக திருப்போரூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் புகுந்து சோதனை நடத்தினார்கள்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்தில் நுழைந்ததும் அங்கு இருந்த ஊழியர்கள் தங்கள் வசம் இருந்த கணக்கில் வராத பணத்தை ஜன்னல் வழியாக காம்பவுண்டு சுவருக்கு வெளியே வீசினார்கள். இதை பார்த்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து சென்று ஊழியர்கள் வீசிய பணத்தை கைப்பற்றினார்கள்.

நேற்றுமுன்தினம் மாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை நள்ளிரவு 1.30 மணி வரை நீடித்தது.

இந்த சோதனை குறித்து சார்பதிவாளர் சம்பத், அவரது உதவியாளர் மற்றும் அலுவலக புகைப்படம் மற்றும் கைரேகை பதிவு செய்யும் ஊழியர் சதீஷ் உள்ளிட்ட பலரிடம் போலீசார் சோதனை நடத்தினார்கள்.

பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 92 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்து, அதுபற்றி சார்பதிவாளர் மற்றும் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த விசாரணையின் முடிவில் லஞ்சம் பெற்றது தொடர்பாக அதிகாரி மற்றும் ஊழியர்களில் சிலர் கைது செய்யப்படலாம் என லஞ்ச ஒழிப்பு போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கடந்த மாதம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. 

Next Story