மருத்துவ படிப்பு நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு 3 நாட்கள் நடக்கிறது


மருத்துவ படிப்பு நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு 3 நாட்கள் நடக்கிறது
x
தினத்தந்தி 7 July 2018 10:45 PM GMT (Updated: 7 July 2018 10:10 PM GMT)

மருத்துவ படிப்பு நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு 16-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

சென்னை, 

மருத்துவ படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு கடந்த 1-ந் தேதி தொடங்கி, நேற்றுடன் நிறைவு பெற்றது.

இதில் 3 ஆயிரத்து 501 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், 1,068 அரசு ஒதுக் கீட்டு பி.டி.எஸ். இடங்களை நிரப்ப கலந்தாய்வு நடந்தது. இவற்றில் 3 ஆயிரத்து 882 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன.

முதல்கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாத அரசு ஒதுக்கீட்டு இடங்களையும், அகில இந்திய மருத்துவ படிப்புக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நிரப்பப்படாத இடங்களையும் நிரப்ப 2-ம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அகில இந்திய மருத்துவ படிப்பு கலந்தாய்வு 23-ந் தேதி நிறைவடைய இருக்கிறது. அதன்பிறகு 2-ம் கட்ட கலந்தாய்வு நடைபெறும்.

சுயநிதி கல்லூரிகளில் 723 எம்.பி.பி.எஸ்., 645 பி.டி.எஸ். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களுக்கான கலந்தாய்வு 16-ந் தேதி தொடங்கி 18-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

இந்த இடங்களுக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு எந்தெந்த நாட்களில் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த தகவல்கள் மாணவர் சேர்க்கை இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரியில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான கலந்தாய்வும் இந்த நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வுடன் சேர்த்து நடைபெற இருக்கிறது. 

Next Story