மாநில செய்திகள்

நாகர்கோவில் அருகே கோழி பண்ணையில்சுரங்கம் அமைத்து செயல்பட்ட போலி மதுபான குடோன் கண்டுபிடிப்பு + "||" + On the poultry farm near Nagercoil Tunnel set up Fake liquor godown Discovery

நாகர்கோவில் அருகே கோழி பண்ணையில்சுரங்கம் அமைத்து செயல்பட்ட போலி மதுபான குடோன் கண்டுபிடிப்பு

நாகர்கோவில் அருகே கோழி பண்ணையில்சுரங்கம் அமைத்து செயல்பட்ட போலி மதுபான குடோன் கண்டுபிடிப்பு
நாகர்கோவில் அருகே கோழி பண்ணையில் சுரங்கம் அமைத்து செயல்பட்ட போலி மதுபான குடோன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில், 

நாகர்கோவில் அருகே கோழி பண்ணையில் சுரங்கம் அமைத்து செயல்பட்ட போலி மதுபான குடோன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து தமிழகம் முழுவதும் மதுபாட்டில்கள் சப்ளை செய்யப்பட்டதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலி மதுபானம்

திண்டுக்கல்லில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது ஒரு காரில் போலி மதுபான பாட்டில்கள் பெட்டி, பெட்டியாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலி மதுபான பாட்டில்களை கடத்தி வந்த குமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த துளசி (வயது 37) உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 1,440 போலி மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் போலி மதுபான பாட்டில்களை நாகர்கோவிலில் இருந்து வாங்கி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து நாகர்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சுரங்கத்தில் செயல்பட்ட குடோன்

அதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில், என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த செந்தில்குமார் (35) என்பவருக்கு சொந்தமான கோழி பண்ணையில் போலி மதுபான குடோன் இருப்பதும், அந்த கோழி பண்ணை நாகர்கோவில் அருகே பொட்டல் வாத்தியார் தோப்பில் இருப்பதும் தெரிய வந்தது. உடனே போலீசார் அங்கு சென்று போலி மதுபான குடோனை தேடியபோது கண்டுபிடிக்க முடியவில்லை. பண்ணை முழுவதிலும் கோழிகளே இருந்தன.

அந்த கோழிகள் அனைத்தையும் அப்புறப்படுத்தியபோது, ஒரு பகுதியில் நிறைய சாக்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை போலீசார் அகற்றி பார்த்தபோது அதற்கு கீழே ஒரு சிறிய சுரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அந்த சுரங்கத்துக்குள் இறங்கி ஆய்வு செய்தனர். அப்போது தான் போலி மதுபான குடோன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கு எரிசாராயம் மற்றும் போலி மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் காலி மதுபான பாட்டில்கள், பிரபல மதுபான கம்பெனிகளின் ஸ்டிக்கர்கள், மதுபானம் நிரப்ப தேவையான எந்திரம் உள்ளிட்ட பொருட்களும் அங்கு மறைந்து வைக்கப்பட்டு இருந்தன.

கைது

இதனைத்தொடர்ந்து 175 லிட்டர் எரிசாராயம் மற்றும் 70 லிட்டர் போலி மதுபானம் மற்றும் போலி மதுபானம் தயாரிக்க தேவையான அனைத்து பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதோடு கோழி பண்ணையில் காவலாளியாக பணியாற்றி வந்த ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த மாயாண்டி என்பவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான கோழி பண்ணை உரிமையாளர் செந்தில்குமாரை போலீசார் தேடி வருகிறார்கள்.

தமிழகம் முழுவதும் சப்ளையா?

இந்த கோழி பண்ணையில் பல ஆண்டுகளாக போலி மதுபான குடோன் செயல்பட்டு வந்துள்ளது. இந்த தோப்பு அம்மாண்டிவிளையை சேர்ந்த பேராசிரியர் ஒருவருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. அந்த பேராசிரியர் தற்போது சென்னையில் வசிக்கிறார். அந்த தோப்பை செந்தில்குமார் குத்தகைக்கு வாங்கி கோழி பண்ணை நடத்தி வந்துள்ளார்.

கோழிகளுக்கு தீவனம் கொண்டு வருவது போல போலி மதுபானத்துக்கு தேவையான எரிசாராயத்தை பெங்களூரு மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து கடத்தி வந்துள்ளனர். பின்னர் எரிசாராயத்தில் கலர் பொடி கலந்து போலி மதுபானமாக மாற்றி இருக்கிறார்கள். அதன்பிறகு டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யும் மதுபாட்டில் போன்றே ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்து வந்திருக்கிறார்கள்.

இங்கு தயாரிக்கப்படும் போலி மதுபானங்கள் தமிழகம் முழுவதும் சப்ளை செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கோழிகளை ஏற்றிச் செல்வது போல இந்த போலி மதுபானங்களை ஏற்றி சென்றதாகவும் தெரிகிறது.

இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆசிரியரின் தேர்வுகள்...