லோக் ஆயுக்தா மசோதா சட்டசபையில் நிறைவேறியது பொய் புகார் கொடுத்தால் ஒரு ஆண்டு சிறை-அபராதம்


லோக் ஆயுக்தா மசோதா சட்டசபையில் நிறைவேறியது பொய் புகார் கொடுத்தால் ஒரு ஆண்டு சிறை-அபராதம்
x
தினத்தந்தி 10 July 2018 12:15 AM GMT (Updated: 9 July 2018 8:23 PM GMT)

தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பதற்கான மசோதா சட்டசபையில் நிறைவேறியது.

சென்னை, 

நாடாளுமன்றத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஊழலுக்கு எதிரான லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, 2014-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.

நாடு முழுவதும் 15 மாநிலங்களில் இதுவரை லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த சட்டம் அமல்படுத்த தாமதமான நிலையில், திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் குருநாதன் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் அடிப்படையில், தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற் படுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதுடன், அதுகுறித்து ஜூலை 10-ந் தேதிக்குள் (அதாவது இன்று) அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தது.

அதன் அடிப்படையில், தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் நிறைவு நாளான நேற்று லோக் ஆயுக்தா சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட மசோதாவை மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக் குமார் தாக்கல் செய்தார்.

லோக் ஆயுக்தா சட்ட மசோதா மீது, அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- பொது வாழ்வில் தூய்மை இருக்க வேண்டும் என்பதை தி.மு.க. முழு மனதோடு விரும்புகிறது. அந்த வகையில், ஊழலுக்கு எதிரான லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட நிலையில், இன்று அவசர அவசரமாக லோக் ஆயுக்தா மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் அதிகார வரம்புக்குள், மற்ற மாநிலங்களில் இருப்பது போன்று முதல்-அமைச்சரையும் விசாரிக்கும் அதிகாரம் உண்டு என்று தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

மேலும், லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவரை முதல்-அமைச்சர், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் ஆகிய 3 பேர் மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். எனவே, நீதிபதியையும் இதில் சேர்க்க வேண்டும். லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவராக ஐகோர்ட்டு நீதிபதி அல்லது ஊழல் தடுப்பு கொள்கையில், பொது நிர்வாகத்தில், விழிப்புணர்வில், நிதியில் மற்றும் சட்டத்தில் 25 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றவரை நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு, தி.மு.க. கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

மேலும், லோக் ஆயுக்தா வரம்புக்குள் அரசு டெண்டர் பற்றி எல்லாம் விசாரிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. கொடுக்கப்படும் புகார்கள் பொய் புகாராக இருந்தால், 1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஊழல் தொடர்பான தகவல் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது தொடர்பாக எதுவும் சொல்லப்படவில்லை. அதுகுறித்து ஒரு பிரிவு இதில் சேர்க்கப்பட வேண்டும். இது புலனாய்வு அமைப்பாக இல்லை. எனவே, நாங்கள் சொன்ன திருத்தங்களை ஏற்க வேண்டும். எனவே, தெரிவு குழுவுக்கு அனுப்பி, அதன் பிறகு முடிவெடுக்க வேண்டும்.

காங்கிரஸ் தலைவர் கே.ஆர். ராமசாமி:- எதிர்க்கட்சி தலைவர் கூறியதுபோன்று சரியான சட்டத்திருத்தங்களை செய்து கொண்டுவர வேண்டும். எனவே, தெரிவு குழுவுக்கு அனுப்பி முடிவெடுக்க வேண்டும்.

(அதன்பிறகு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினர் முகமது அபுபக்கரும் இதே கோரிக்கையை வலியுறுத்தினார்)

அமைச்சர் ஜெயக்குமார்:- லோக் ஆயுக்தா அதிகார வரம்பின்கீழ் மாநில முதல்-அமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள், நிறுவனங்கள், சங்கங்கள் உள்ளிட்டவைகள் வரும். 4 ஆண்டுகளுக்குள் நடந்த ஊழல் குறித்து லோக் ஆயுக்தா அமைப்பில் புகார் அளிக்கலாம். மேலும், தனியொரு ஆளாக எந்த முடிவும் எடுக்க முடியாது. குறைந்தபட்சம் 3 உறுப்பினர்களின் ஆதரவு இருக்க வேண்டும். எந்த பதவியில் இருப்பவரையும் விசாரிக்க லோக் ஆயுக்தா அமைப்புக்கு தடையில்லை. பொய் புகார் அளித்தால், புகார் தாரர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்க்கட்சி தலைவர் சொன்ன நல்ல விஷயங்கள் தொடர்பாக திருத்தம் செய்ய அரசு பரிசீலனை செய்யும்.

அமைச்சர் சி.வி.சண்முகம்:- பொய் புகார் கொடுத்தால் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதம் என்பது லோக்பால் சட்டத்திலேயே உள்ளது. அதைத்தான் லோக் ஆயுக்தாவிலும் கொண்டுவரப்பட்டுள்ளது. விசாரணை நடத்த யாருடைய முன் அனுமதியையும் பெறத்தேவையில்லை.

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- இது ஒரு அதிகாரம் இல்லாத அமைப்பாக, பல் இல்லாததுபோல் கொண்டுவரப்படுகிறது. அதனால்தான், தெரிவு குழுவுக்கு அனுப்பி செயல்படுத்த வேண்டும் என்று சொல்கிறோம். தற்போதைய முடிவிலேயே நீங்கள் இருந்தால் நாங்கள் வெளிநடப்பு செய்யும் சூழ்நிலை ஏற்படும்.

அமைச்சர் ஜெயக்குமார்:- ஊழலை முற்றிலும் ஒழிக்க லோக் ஆயுக்தா அமைப்பு முழுமையானதாக இருக்கும். எனவே, இதை நிறைவேற்றித்தர வேண்டும்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் கலந்துபேசித்தான் முடிவு எடுக்கப்படும்.

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- இவ்வளவு சொல்லிய பிறகும், தெரிவு குழுவுக்கு அனுப்ப மறுப்பதால், தி.மு.க. இதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

(மு.க.ஸ்டாலின் பேசி முடித்ததும், அவரது தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினரும் வெளிநடப்பு செய்தனர்.)

அதன்பிறகு, மாலை 3.44 மணிக்கு வரலாற்று சிறப்புமிக்க லோக் ஆயுக்தா சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை கவர்னர் நியமனம் செய்வார். அவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 70 வயது, இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை பதவியில் இருப்பார்கள். தலைவருக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு வழங்கும் ஊதியமும், உறுப்பினர்களுக்கு ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு வழங்கப்படும் ஊதியமும் வழங்கப்படும்.

ஊழல் நடைபெற்றதாக கருதப்படும் தேதியில் இருந்து 4 ஆண்டுகளுக்குள் புகார் செய்யப்பட வேண்டும். புகார் பெறப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும்.

Next Story