‘பெப்பர் ஸ்பிரே’ பயன்படுத்துவது மனித உரிமை மீறல் ஆகாதா? டி.ஜி.பி. விளக்கம் அளிக்க உத்தரவு


‘பெப்பர் ஸ்பிரே’ பயன்படுத்துவது மனித உரிமை மீறல் ஆகாதா? டி.ஜி.பி. விளக்கம் அளிக்க உத்தரவு
x
தினத்தந்தி 9 July 2018 10:00 PM GMT (Updated: 9 July 2018 8:55 PM GMT)

மது போதையில் தகராறு செய்பவர்களை கட்டுப்படுத்த ‘பெப்பர் ஸ்பிரே’ பயன்படுத்துவது மனித உரிமை மீறல் ஆகாதா? என்பதற்கு டி.ஜி.பி. விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.

சென்னை, 

சென்னையில் மது போதையில் பொதுஇடங்களில் தகராறு செய்பவர்களை ‘பெப்பர் ஸ்பிரே’ மூலம் கட்டுப்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்திடம் இருந்து 400 ஸ்பிரே பாட்டில்களை சென்னை போலீஸ் வாங்கி உள்ளது.

சோதனை முயற்சியாக சென்னை அம்பத்தூர் வட்டத்தில் உள்ள 15 போலீஸ் நிலையங்களில் இந்த பெப்பர் ஸ்பிரேயை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு போலீஸ் நிலையத்துக்கும் 10 ஸ்பிரே பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ளன.

‘மதுபோதையில் இருக்கும் நபர்கள் மீது பெப்பர் ஸ்பிரேயை அடித்தால் கண், மூக்கு மற்றும் தோல் பகுதியில் எரிச்சல் ஏற்பட்டு வலியை உண்டாக்கும். குறைந்தபட்சம் 45 நிமிடம் வரை கடுமையான பாதிப்புகளை இந்த ஸ்பிரே ஏற்படுத்தும். அதிகபட்சம் 3 மணி நேரம் பாதிப்பை உணரச்செய்யும். கண்ணீர்புகை குண்டுகளைவிட வேகமாக இந்த ஸ்பிரே செயல்படும்’ என்று கூறப்படுகிறது.

மது போதையில் தகராறில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த இதுபோன்ற பெப்பர் ஸ்பிரேயை பயன்படுத்துவது என்பது மனித உரிமை மீறல் ஆகாதா? என்று கேள்வி எழுப்பி உள்ள மாநில மனித உரிமை ஆணையம் இந்த விவகாரத்தை தானாக முன்வந்து(சூமோட்டோ) வழக்காக எடுத்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மது போதையில் தகராறில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த பெப்பர் ஸ்பிரே போன்றவைகளை பயன்படுத்த எந்த சட்டம் அனுமதி அளிக்கிறது. ஒரு நபர் மீது இந்த ஸ்பிரேயை அடித்தால் கண், மூக்கு மற்றும் தோல் பகுதியில் எரிச்சல் ஏற்படும் என்கிறபோது இதன்மூலம் சம்பந்தப்பட்ட நபருக்கு உடல்நல பாதிப்பு ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம். இதுபோன்ற செயல் மனித உரிமை மீறல் ஆகாதா?

இதுதொடர்பாக தமிழக டி.ஜி.பி., சென்னை மாநகர போலீஸ் கமிஷனர், அம்பத்தூர் துணை கமிஷனர் ஆகியோர் 2 வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story