மக்கள் நீதி மய்யத்தின் மண்டல நிர்வாகிகளுடன், கமல்ஹாசன் ‘திடீர்’ ஆலோசனை


மக்கள் நீதி மய்யத்தின் மண்டல நிர்வாகிகளுடன், கமல்ஹாசன் ‘திடீர்’ ஆலோசனை
x
தினத்தந்தி 10 July 2018 11:39 PM GMT (Updated: 10 July 2018 11:39 PM GMT)

மக்கள் நீதி மய்யத்தின் மண்டல நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் நேற்று தனித்தனியே ஆலோசனை நடத்தினார். அப்போது மக்கள் பிரச்சினை குறித்து கேட்டறிந்தார்.

சென்னை,

மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட பொறுப்பாளர் பட்டியல் நாளை (வியாழக்கிழமை) வெளியிடப்பட உள்ளது. அன்றைய தினமே பொறுப்பாளர்கள் கூட்டமும் கமல்ஹாசன் தலைமையில் சென்னை ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகத்தில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் மக்கள் நீதி மய்யத்தின் மண்டல நிர்வாகிகளை கமல்ஹாசன் திடீரென்று சந்தித்து உள்ளார். ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் கட்சியின் கிழக்கு மற்றும் தெற்கு மண்டல நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:-

மக்கள் நீதி மய்யத்தின் மண்டல நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை முற்றிலும் வித்தியாசமானது. ஒவ்வொரு நிர்வாகியையும் தனித்தனியாக கமல்ஹாசன் சந்தித்து கருத்து கேட்டு வருகிறார். அந்தந்த பகுதியில் நிலவும் மக்கள் பிரச்சினைகள் என்னென்ன? அரசியல் நிலவரம் என்ன? மக்கள் நீதி மய்யம் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்? என்று பல்வேறு கேள்விகளை முன்வைத்து கமல்ஹாசன் கருத்து கேட்டு வருகிறார்.

‘தற்போது வழங்கப்படும் பொறுப்புகள் தற்காலிகமானது தான். உங்களது உழைப்பு மற்றும் மக்கள் பிரச்சினைகளை கையாளும் திறனுக்கும் ஏற்ப அப்பொறுப்புகள் நிரந்தரம் செய்யப்படும்’ என்று மண்டல நிர்வாகிகளுக்கு அவர் அறிவுரையும் வழங்கி இருக்கிறார்.

மேலும் ஒவ்வொருவரையும் அவரே தனது அறைக்கு அழைத்துச்சென்று ஆலோசனை நடத்தி, பின்னர் நன்றி கூறி வழியனுப்பி வைக்கிறார். இது கட்சி நிர்வாகிகளை பெரிதும் கவர்ந்துள்ளது.

இந்த கூட்டத்தில் கட்சியின் உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் யாரும் பங்கேற்க அவர் அனுமதிக்கவில்லை. நாளை (இன்று) மேற்கு மண்டல நிர்வாகிகளை கமல்ஹாசன் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். வடக்கு மண்டல நிர்வாகிகளை ஏற்கனவே கமல்ஹாசன் சந்தித்து ஆலோசனை நடத்தி விட்டார்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story