புதிய லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


புதிய லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 July 2018 12:24 AM GMT (Updated: 2018-07-11T05:54:37+05:30)

அனைத்து அதிகாரங்களும் கொண்ட புதிய லோக் ஆயுக்தா சட்டத்தை சட்டசபையை கூட்டி நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதற்கான சட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. லோக் ஆயுக்தா அமைப்பு எப்படி இருந்து விடக்கூடாது என்று அச்சம் தெரிவித்திருந்தேனோ, அதேபோன்று தான் உருவாக்கப்படவிருக்கிறது. தமிழக அரசு உருவாக்க உள்ள லோக் ஆயுக்தாவால் ஊழலை எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியாது என்பது தான் உண்மை.

தமிழக முதல்-அமைச்சரும் லோக் ஆயுக்தாவின் அதிகார வரம்புக்குள் வருவார் என்று சட்டத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. முதல்-அமைச்சரும் ஓர் அமைச்சராகக் கருதப்படுவார் என்று 2(1) (ஐ) பிரிவில் கூறப்பட்டிருப்பதன் அடிப்படையில் மட்டுமே முதல்-அமைச்சர் மீதான ஊழல் புகாரை விசாரிக்கும்படி லோக் ஆயுக்தாவை கோர முடியும். இந்த குழப்பத்தை முதல்-அமைச்சர்கள் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். ஓர் அரசு நிர்வாகத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெறுவது ஒப்பந்தங்களை வழங்குவதிலும், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களிலும் தான். ஆனால், இவை இரண்டிலும் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் அதிகாரம் லோக் ஆயுக்தாவுக்கு இல்லை.

அதேபோல், அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல்கள் குறித்த புகார்களை லோக் ஆயுக்தா நேரடியாக விசாரிக்க முடியாது. தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையரிடம் இதுகுறித்து புகார் அளித்து, அதில் முகாந்திரம் இருப்பதாக அவர் கருதினால் மட்டுமே அப்புகார் லோக் ஆயுக்தாவுக்கு அனுப்பி வைக்கப்படுமாம். இவ்வாறு எந்த அதிகாரமும் இல்லாத லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்குவதற்கு பதிலாக, ஊழலை சட்டப்பூர்வமாக்குவதாக அரசு அறிவித்துவிடலாம்.

இதற்கெல்லாம் மேலாக, லோக் ஆயுக்தாவில் தவறான புகார்களை அளிப்பவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. ஊழல்கள் குறித்து எவரும் புகார் செய்யக்கூடாது என்பதற்காகவே இத்தகைய மிரட்டல் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

ஊழலை ஒழிப்பதற்கு பதிலாக ஊழலை வளர்க்கும் இந்த அமைப்பை ஏற்க முடியாது. இதற்கு மாற்றாக அனைத்து அதிகாரங்களும் கொண்ட புதிய லோக் ஆயுக்தா சட்டத்தை பேரவையைக் கூட்டி நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சட்டமன்றக் கூட்டத்தில் லோக் ஆயுக்தா சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது.

லோக் ஆயுக்தா அதிகார வரம்புக்குள் வருபவர்கள் பொது ஊழியர்களாக கருதப்பட்டு அவர்கள் மீது ஏதேனும் ஊழல் குற்றச்சாட்டு எழுப்படும்போது அதுகுறித்து விசாரித்து, நடவடிக்கை எடுப்பதற்காக அமைக்கப்படும் லோக் ஆயுக்தா சட்டம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அதே நேரத்தில் இந்த சட்டம் முறையாக, நேர்மையாக, வெளிப்படைத்தன்மையோடு செயல்படுத்தப்பட்டு மக்களுக்கு உண்மைத் தன்மையை வெளிப்படுத்தினால் தான் ஊழல், லஞ்சத்துக்கு இடம் கொடுப்பவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அந்த அடிப்படையில் தற்போது தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட லோக் ஆயுக்தா சட்ட மசோதா சட்டமாக செயல்பாட்டுக்கு வந்து தமிழகத்தில் ஊழல், லஞ்சத்துக்கு இடமில்லை என்ற நிலை ஏற்பட வேண்டும்.

எனவே, தமிழகத்தில் காமராஜர் ஆட்சிக்குப் பிறகு நேர்மையான, நியாயமான, வெளிப்படைத்தன்மையான ஆட்சி இனி வரும் காலங்களில் காமராஜரை பின்பற்றும் வகையில் நடைபெற வேண்டும், தொடர வேண்டும் என்பது தான் த.மா.கா.வின் எதிர்பார்ப்பாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக வாழ்வுரிமைக் கட்சியைப் பொறுத்தவரையில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள லோக் ஆயுக்தா மசோதா நிறைவாக இல்லை.

லோக் ஆயுக்தா தன்னிச்சையான அமைப்பாக இருக்க வேண்டும். ஆளுங்கட்சி சார்ந்ததாக இருக்கக் கூடாது. ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அல்லது ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு தலைமை நீதிபதிதான் லோக் ஆயுக்தாவுக்கு தலைமை தாங்க வேண்டும். அதன் அமைப்புக் குழுவில் முதல்-அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், பணியில் உள்ள ஐகோர்ட்டு தலைமை நீதிபதி உள்ளிட்ட 3 நீதிபதிகள் ஆகிய 5 பேர் இடம் பெற்றால்தான் உண்மையில் அது சரியான நீதி அமைப்பாக இருக்கும்.

எனவே பொது விவாதத்திற்கு விட்டு ஆலோசனை பெற்று, வேண்டிய திருத்தங்களைச் செய்து, அதன் பிறகே இம்மசோதாவைச் சட்டமாக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story