தனியார் சத்துமாவு நிறுவனம் ரூ.1,350 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிப்பு - வருமான வரித்துறை

தனியார் சத்துமாவு நிறுவனம் ரூ.1,350 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கபட்டதாக வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது. #Incometax #ITRaid
சென்னை
தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு முட்டைகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு தேவையான சத்துமாவு, பருப்பு போன்றவற்றை வினியோகம் செய்யும் கிறிஸ்டி பிரைடு நிறுவனம், அக்னி குழும நிறுவனங்கள் உள்பட 4 நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு புகார் கிடைத்தது. குறிப்பாக ரூ.1,000 கோடி அளவில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக கூறப்பட்டது.
இதையடுத்து கடந்த 5-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். சென்னை, சேலம், திருச்செங்கோடு, நாமக்கல், கோவை, ஈரோடு, கர்நாடகா மாநிலம் பெங்களூரு, டெல்லி மற்றும் மும்பை உள்பட அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான 76 இடங்களில் வருமான வரி சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஐ.ஏ.எஸ். அதிகாரி சுதாதேவியின் சென்னை வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.
5 நாட்கள் நடந்த சோதனையில் ரூ.17 கோடி, 10 கிலோ தங்கம், ஏராளமான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக நிறுவனத்தின் வரவு-செலவு ஆவணங்களும், இதர நிறுவனங்களின் தொழில்சார்ந்த விவர ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன. மேலும் 100 பென்டிரைவ்கள், ஒரு லேப்-டாப் மற்றும் ஹார்டு டிஸ்க்குகளும் கைப்பற்றப்பட்டு உள்ளன.
5 நாட்களாக 7 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் தனியார் சத்துமாவு நிறுவனம் ரூ.1,350 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கபட்டதாக வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story