போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டியதாக புகார்: கருணாஸ் எம்.எல்.ஏ. கார் டிரைவர் கைது


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டியதாக புகார்: கருணாஸ் எம்.எல்.ஏ. கார் டிரைவர் கைது
x
தினத்தந்தி 11 July 2018 10:00 PM GMT (Updated: 11 July 2018 9:41 PM GMT)

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டியதாக கருணாஸ் எம்.எல்.ஏ.வின் கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

நாங்குநேரி, 

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டியதாக கருணாஸ் எம்.எல்.ஏ.வின் கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்தவர் சுப்பையா (வயது 24). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினரான சுடலைக்கண்ணுவுக்கும் இடையே நம்பியாற்றில் மணல் அள்ளுவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இதில் ஏற்பட்ட தகராறில் சுப்பையா நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சுப்பையா உடல் பிரேத பரிசோதனை முடிந்து, நேற்று முன்தினம் இரவில் அவரது சொந்த ஊரில் உடல் அடக்கம் நடந்தது. அதனை தொடர்ந்து சுப்பையாவின் உறவினர் முத்துராமலிங்கம் மகன் கார்த்தி (24) உள்பட 4 பேர் சேர்ந்து சுடலைக்கண்ணு வீடு உள்பட 3 பேரின் வீடுகளை சூறையாட முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாங்குநேரி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் அவர்களை தடுக்க முயன்றார்.

இதில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து முருகனுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கார்த்தியை நேற்று கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

கைதான கார்த்தி, கருணாஸ் எம்.எல்.ஏ.வின் கார் டிரைவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story