மாணவர்கள் சுயதொழில் தொடங்க முன்வர வேண்டும் வெ.இறையன்பு பேச்சு


மாணவர்கள் சுயதொழில் தொடங்க முன்வர வேண்டும் வெ.இறையன்பு பேச்சு
x
தினத்தந்தி 11 July 2018 11:00 PM GMT (Updated: 11 July 2018 10:23 PM GMT)

மாணவர்கள் சுயதொழில் தொடங்க முன்வர வேண்டும் என்று தொழில் நிறுவன மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன இயக்குனர் வெ.இறையன்பு கூறினார்.

சென்னை, 

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தொழில் முனையும் ஆர்வம் உள்ளவர்களுக்கு வழிகாட்டி வருகிறது. கல்லூரி மாணவர்களிடம் புத்தாக்க சிந்தனைகளை உருவாக்க புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கிறது.

இதற்காக தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தமிழகத்தில் உள்ள 88 அரசு கல்லூரிகளில் விழிப்புணர்வு முகாம் நடத்த திட்டமிட்டது.

இதன் தொடக்க நிகழ்ச்சி சென்னையில் உள்ள நந்தனம் அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன இயக்குனர் வெ.இறையன்பு தலைமை தாங்கி பேசியதாவது:-

மாணவர்கள் படிப்பை முடித்தவுடன் அரசு வேலையை மட்டும் நம்பி இருக்காமல், சுயதொழில் தொடங்கவும் முன்வர வேண்டும். இதற்கு தொழில் முனைவோருக்கு முதலில் விருப்பம் இருக்க வேண்டும். மேலும் அந்த தொழிலில் முன் அனுபவம் அவசியம். சூழ்நிலைக்கு ஏற்ப தொழில் முனைவோர் தங்களை மாற்றிக்கொண்டு சுயதொழிலில் ஈடுபட வேண்டும்.

படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கும் என காத்திருக்க வேண்டாம். தொழில் தொடங்கினால் அவர்கள் 100 பேருக்கு வேலை கொடுக்க முடியும். இதுவரை 1 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு இந்த நிறுவனம் பயிற்சி அளித்து உள்ளது. மாணவர்கள் விருப்பத்துடன், தன்னம்பிக்கையுடன், சூழலுக்கு ஏற்ப தொழில் தொடங்கினால் அது முன்னேற்றம் அடையும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் பேசுகையில், படித்து முடிக்கும் மாணவர்கள் சொந்தமாக தொழில் தொடங்கினால் தங்களை மட்டும் இன்றி, சமுதாயத்தையும் முன்னேற்ற முடியும். தொழில் முனைவோருக்கு மாநில அரசால் ஏராளமான கடன் உதவி திட்டங்கள், மானியங்கள் வழங்கப்படுகின்றன. அவற்றை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

பின்னர் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன கூடுதல் இயக்குனர் ஷஜீவனா உள்பட பலர் பேசினர். இதில் தொழில் முனையும் ஆர்வம் கொண்ட 100 மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி முதல்வர் பிரபாகரன் வரவேற்றார். பேராசிரியர் கருணாநிதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பேராசிரியர் சேகர் நன்றி கூறினார்.

Next Story