கமல்ஹாசன் கட்சிக்கு புதிய நிர்வாகிகள் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் துணைத்தலைவராக நியமனம்


கமல்ஹாசன் கட்சிக்கு புதிய நிர்வாகிகள் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் துணைத்தலைவராக நியமனம்
x
தினத்தந்தி 12 July 2018 9:15 PM GMT (Updated: 12 July 2018 8:02 PM GMT)

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை, 

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியை பதிவு செய்து, தேர்தல் கமி‌ஷன் அங்கீகாரம் அளித்தது.

இந்தநிலையில் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் இல்லத்தில் செயல்படும் மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியேற்றும் விழா நேற்று நடைபெற்றது.

கமல்ஹாசன் கட்சி கொடியை ஏற்றி வைத்து, புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:–

நம்முடைய பயணத்தின் முக்கிய மைல்கல்லாக மக்கள் நீதி மய்யம் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட பின்னர் இந்த கொடியேற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

இந்த முக்கியமான நிகழ்வில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் பதவிக்கு கு.ஞானசம்பந்தன், பொதுச்செயலாளர் பதவிக்கு அருணாச்சலம், பொருளாளர் பதவிக்கு சுரேஷ் ஆகியோர் நியமனம் செய்யப்படுகின்றனர். இவர்களுடன் தலைவராக உங்கள் நான்(கமல்ஹாசன்).

இந்திய தேர்தல் ஆணையத்தால் மக்கள் நீதி மய்யம் கட்சி பதிவு செய்யப்படுவதற்கு முன்பு அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழு கலைக்கப்படுகிறது. அந்த குழுவில் அங்கம் வகித்த ஸ்ரீபிரியா, கமீலா நாசர், பாரதி கிருஷ்ணகுமார், சி.கே.குமரவேலு, ஏ.ஜி.மவுரியா, எஸ்.மூர்த்தி, ஆர்.ரங்கராஜன், சவுரிராஜன், தங்கவேலு ஆகியோர் இனி மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களாக இன்று(நேற்று) முதல் செயல்படுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

கமல்ஹாசன் கட்சி கொடியேற்று விழாவுக்காக சாலையோரம் சிறிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்த மேடையில் நின்று கமல்ஹாசன் பேசியபோது, அவரது பேச்சை கேட்பதற்காக மக்கள் நீதி மய்யத்தினரும், பொதுமக்களும் சாலையில் திரண்டிருந்தனர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வாகன ஓட்டிகள் கடும் அவஸ்தைக்குள்ளாகினர். இதனை உணர்ந்த கமல்ஹாசன் நிகழ்ச்சியை வேகமாக முடித்துவிட்டு கிளம்பினார்.

Next Story