சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்துள்ளோம் ஐகோர்ட்டில், திட்ட இயக்குனர் பதில் மனு தாக்கல்


சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்துள்ளோம் ஐகோர்ட்டில், திட்ட இயக்குனர் பதில் மனு தாக்கல்
x
தினத்தந்தி 12 July 2018 10:45 PM GMT (Updated: 12 July 2018 9:11 PM GMT)

சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு அனுமதிக் கேட்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பம் செய்துள்ளதாக திட்ட இயக்குனர் சென்னை ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை,

சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த திட்டத்துக்காக தங்களது விவசாய நிலங்களை அரசு ஆர்ஜிதம் செய்வதை கடுமையாக எதிர்த்து போராடி வருகின்றனர்.

இந்த திட்டத்துக்கு எதிராக பல வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்டுள்ளது. அதில், தர்மபுரி மாவட்டம், ஏ.பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பி.வி.கிருஷ்ணமூர்த்தி என்பவரும் தன் நிலத்தை ஆர்ஜிதம் செய்வதை எதிர்த்தும், இந்த திட்டத்துக்கான அறிவிப்பை ரத்து செய்யக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கிற்கு தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை அமல்படுத்தும் பிரிவின், திட்ட இயக்குனர் பி.டி.மோகன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், இந்த 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு அனுமதி கேட்டு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்திடம் விண்ணப்பம் செய்துள்ளதாக கூறியுள்ளார்.

அவற்றின் விவரம் பின்வருமாறு:-

சென்னை முதல் சேலம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பயன்படுத்தப்படும் வாகனங்களில் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்ய பெங்களுரூவை சேர்ந்த நிறுவனத்திடம் பணி ஒப்படைக்கப்பட்டது.

சென்னையில் இருந்து திண்டிவனம், உளுந்தூர்பேட்டை வழியாக சேலத்துக்கு 334 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டும். இந்த 4 வழிச்சாலையில் கடந்த மார்ச் 6-ந்தேதி மட்டும் 82 ஆயிரத்து 995 கார்கள் சென்றுள்ளன. ஆனால், இந்த சாலையின் தரம் நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் கார்கள் மட்டுமே பயன்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, சென்னையில் இருந்து காஞ்சீபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி வழியாக சேலம் செல்லும் நெடுஞ்சாலையில், கடந்த மார்ச் 5-ந்தேதி மட்டும் 61 ஆயிரத்து 424 கார்கள் சென்றுள்ளன. ஆனால், இந்த 4 வழிச்சாலையின் தரம் நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் கார்கள் மட்டுமே பயன்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த 8 வழி பசுமைச்சாலை திட்டத்தினால், சென்னை -சேலம் இடையே உள்ள பயண நேரம் குறைகிறது. லாரிகள் போன்ற கனரக வாகனங்களின் எரிபொருள் 15 லிட்டரும், கார் போன்ற இலகு வாகனங்களின் எரிபொருள் 6 லிட்டரும் குறைகிறது. அதனால், நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.10 கோடி மதிப்புள்ள 2 லட்சத்து 85 ஆயிரம் லிட்டர் டீசல் சேமிக்கப்படுகிறது. அதாவது, ஆண்டுக்கு சுமார் ரூ.700 கோடி சேமிக்கப்படுகிறது. வாகன புகையின் வெளியேற்றமும் குறைவதால், சுற்றுச்சூழல் பாதிப்பு குறைகிறது.

இந்த பசுமை வழிச்சாலையினால், வந்தவாசி, போளூர் போன்ற பின்தங்கிய நகரங்களில் தொழிற்சாலைகள் பல உருவாகும். போக்குவரத்து அதிகப்படுவதால், இந்த பசுமைச்சாலை அருகேயுள்ள ஊர்களின் பொருளாதார வளம் பெருகும். மாணவர்கள், பணிக்கு செல்வோர்களின் பயண நேரம் வெகுவாக குறைகிறது.

இந்த 8 வழி பசுமைச்சாலைத் திட்டத்துக்காக சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்திடம் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில், கடந்த மே 7-ந்தேதி நிபுணர்கள் மதிப்பீட்டு குழு கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வண்ணம் பாதையை மாற்றி அமைக்க ஆய்வு செய்யவேண்டும். கல்வராயன் மலை வனப்பகுதியை தவிர்க்கும் விதமாக செங்கிராமம் வழியாக சேலத்துக்கு பாதை அமைக்க வாய்ப்புள்ளதா? என்பதை ஆய்வு செய்யவேண்டும். நெடுஞ்சாலை அமைப்பதற்காக நீர்நிலைகள், சதுப்பு நிலங்கள் தவிர்க்கவேண்டும்.

அந்த நீர்நிலைகளில் உள்ள நீரை பாதுகாக்கவேண்டும். இந்த திட்டம், வனவிலங்கு வழித்தடங்கள், வனவிலங்கு சரணாயலம் அருகே (10 கிலோ மீட்டருக்குள்) அமையவில்லை என்று தடையில்லா சான்றிதழை வனவிலங்கு தலைமை வார்டனிடம் பெறவேண்டும். இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யும்படி மத்திய வனத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் கடந்த ஜூன் 8-ந்தேதி கடிதம் அனுப்பியுள்ளது.

இதன்படி, ஐ.ஐ.டி.யில் சுற்றுச்சூழல் அறிவியல் துறை இணை பேராசிரியரை, 8 வழி பசுமைச்சாலை அமைப்பது குறித்து ஒருங்கிணைந்த மதிப்பீட்டு ஆய்வு செய்யும்படி கடந்த ஜூன் 13-ந்தேதி உத்தரவிடப்பட்டது. இந்த திட்டம் விதிமுறைகளை மீறி மேற்கொள்ளப்பட வில்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story