நடத்துனர் இல்லாமல் ஓட்டுனர் மட்டும் உள்ள பஸ்கள் இயக்கப்படுகிறதா? அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி


நடத்துனர் இல்லாமல் ஓட்டுனர் மட்டும் உள்ள பஸ்கள் இயக்கப்படுகிறதா? அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 12 July 2018 10:15 PM GMT (Updated: 12 July 2018 9:21 PM GMT)

நடத்துனர் இல்லாமல், ஓட்டுனர் மட்டும் உள்ள பஸ்கள் தமிழகத்தில் இயக்கப்படுகிறதா? என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை, 

நடத்துனர் இல்லாமல், ஓட்டுனர் மட்டும் உள்ள பஸ்கள் தமிழகத்தில் இயக்கப்படுகிறதா? என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு மாநில போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் ஆறுமுகநயினார் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

பயணிகள் பஸ்களில், நடத்துனர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று மோட்டார் வாகனச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் நடத்துனர் இல்லாமல், ஓட்டுனர் மட்டும் உள்ள பஸ்கள் பல இயக்கப்படுகின்றன. இது மோட்டார் வாகனச்சட்டத்துக்கு எதிரானது. மேலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக பயணிகளை ஏற்றப்படுவதை தடுப்பது, பஸ்களை சுத்தமாக பராமரிப்பது போன்ற பொறுப்புகள் நடத்துனருக்கு உள்ளது.

ஆனால், நடத்துனரே இல்லாமல், நடத்துனரின் பணியை ஓட்டுனருக்கு வழங்கி, ஓட்டுனரை மட்டும் கொண்டு இயங்கும் அரசு பஸ்கள் ஏராளமாக தமிழகத்தில் உள்ளன. இந்த நடைமுறையை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகரம் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் நடத்துனர் இல்லாமல் இயக்கப்படுகிறதா? என்பதற்கு விரிவான பதில் மனுவை தமிழக போக்குவரத்துத்துறை செயலாளர் தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை 18-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Next Story