ஐகோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் ஆயுள் கைதியை விடுவிக்காதது ஏன்? உள்துறை செயலாளருக்கு, மனித உரிமை ஆணையம் ‘சம்மன்’


ஐகோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் ஆயுள் கைதியை விடுவிக்காதது ஏன்? உள்துறை செயலாளருக்கு, மனித உரிமை ஆணையம் ‘சம்மன்’
x
தினத்தந்தி 12 July 2018 11:00 PM GMT (Updated: 12 July 2018 10:19 PM GMT)

ஐகோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் ஆயுள் கைதியை விடுவிக்காதது ஏன்? என்பது குறித்து தமிழக உள்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்ப மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி டி.ஜெயச்சந்திரன், கோவை மத்திய சிறையில் கடந்த மாதம் 22-ந் தேதி ‘திடீர்’ ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, ஆயுள் கைதியான ஜப்ரூ என்ற செய்யது ஜாபர் அகமது என்பவர் தன்னை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கடந்த 14.12.2017 அன்று ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தும் இதுவரை தன்னை சிறையில் இருந்து விடுவிக்க சிறைத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நீதிபதியிடம் கண்ணீர் மல்க புகார் கூறினார்.

இதுகுறித்து நீதிபதி விசாரணை நடத்தியபோது, கடந்த 19 ஆண்டுகளாக ஜப்ரூ சிறையில் இருந்து வருவதும், 7 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்தவர்களை விடுதலை செய்ய கடந்த 2008-ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணை அடிப்படையில் ஜப்ரூவை விடுவிக்க வேண்டும் என்று அவரது சகோதரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்ததும், வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஜப்ரூவை சிறையில் இருந்து விடுவிக்க உத்தரவு பிறப்பித்ததும் தெரியவந்தது.

இந்த உத்தரவு நகல் சிறைத்துறை அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த போதிலும் ஜப்ரூ சிறையில் இருந்து விடுவிக்கப்படவில்லை என்பதும் நீதிபதிக்கு தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, அந்த விவகாரத்தை நீதிபதி டி.ஜெயச்சந்திரன் தானாக முன்வந்து(சூமோட்டோ) வழக்காக எடுத்தார்.

ஐகோர்ட்டு உத்தரவிட்டு 7 மாதங்கள் ஆகியும் ஆயுள்கைதி ஜப்ரூவை சிறையில் இருந்து விடுவிக்காதது ஏன்? என்பது குறித்து தமிழக உள்துறை செயலாளர், சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., கோவை சிறைத்துறை சூப்பிரண்டு ஆகியோர் விரிவான அறிக்கை மற்றும் விளக்கத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.

இந்தநிலையில் நேற்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக உள்துறை செயலாளர் உள்ளிட்ட 3 பேரின் விளக்கம் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது.

இதை படித்து பார்த்த நீதிபதி ஜெயச்சந்திரன், அவர்களது விளக்கம் திருப்திகரமாக இல்லை என்று தெரிவித்தார். பின்னர், இதுதொடர்பாக தமிழக உள்துறை செயலாளர், சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., கோவை சிறைத்துறை சூப்பிரண்டு ஆகியோர் வருகிற 24-ந் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

Next Story