பயத்தினால் குதிக்க மறுத்தவரை பயிற்சியாளர் தள்ளிவிட்டார் நேரில் பார்த்த மாணவ–மாணவிகள் பேட்டி


பயத்தினால் குதிக்க மறுத்தவரை பயிற்சியாளர் தள்ளிவிட்டார் நேரில் பார்த்த மாணவ–மாணவிகள் பேட்டி
x
தினத்தந்தி 13 July 2018 11:15 PM GMT (Updated: 13 July 2018 7:50 PM GMT)

பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது பயத்தினால் மாடியில் இருந்து குதிக்க மறுத்தவரை பயிற்சியாளர் தள்ளிவிட்டார் என்று சம்பவத்தை நேரில் பார்த்த மாணவ–மாணவிகள் தெரிவித்தனர்.

கோவை,

தொண்டாமுத்தூர் அருகே நரசீபுரம் விராலியூரில் உள்ள கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டத்தை சேர்ந்த மாணவ– மாணவிகளுக்கு அளிக்கப்பட்ட பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது 2–வது மாடியில் இருந்து கீழே விழுந்த மாணவி லோகேஸ்வரி பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த மாணவ–மாணவிகள் கூறியதாவது:–

எங்கள் கல்லூரியில் நடந்த பேரிடர் மேலாண்மை பயிற்சி காலை 10 மணிக்கு தொடங்கியது. மதியம் 1 மணி வரை பேரழிவுகள் ஏற்படும்போது அதில் இருந்து தப்பிப்பது? அதில் சிக்கியவர்களை காப்பாற்றுவது எப்படி? என்பது குறித்து வகுப்பு எடுக்கப்பட்டது.

அதன் பின்னர் மதியம் 1½ மணியில் இருந்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. மாடிகளில் சிக்கியவர்கள் கயிறு மூலம் கீழே இறங்குவது எப்படி?, கயிறு இல்லை என்றால் ஜன்னல்களை பிடித்தபடி கீழே இறங்குவது, கீழே விரித்து இருக்கும் வலையில் துள்ளுவது எப்படி? என்பது உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

முதலில் 3–வது மாடியில் சிக்கியவர்கள் கயிறு மூலம் இறங்குவது எப்படி என்று பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் பின்னர் 2–வது மாடியில் இருந்து கீழே குதிப்பது குறித்த பயிற்சி நடந்தது. இதற்காக வலையை மாணவர்கள் கீழே நின்று பிடித்துக்கொண்டனர். அப்போது 2–வது மாடியில் இருந்து கீழே குதிக்க தைரியமான மாணவிகள் மேலே வரலாம் என்று பயிற்சியாளர் கூறினார்.

அப்போது லோகேஸ்வரி தைரியமாக மாடிக்கு சென்றார். அவர் அந்த மாடியில் உள்ள சன்சேடு பகுதியில் நின்று கீழே பார்த்ததும் பயந்து விட்டார். அவரை பயிற்சியாளர் குதிக்கும்படி கூறினார். அப்போது பயந்துபோன அவர் சன்சேடு பகுதியில் அமர்ந்து, கைகளால் பிடித்துக்கொண்டார்.

அவரை 2 முறை கீழே குதிக்கும்படி கூறி பயிற்சியாளர் தள்ளினார். ஆனால் அவர் சன்சேடு பகுதியை நன்றாக பிடித்துக்கொண்டதால் குதிக்கவில்லை. இதையடுத்து 3–வது முறை பயிற்சியாளர் அவரை வேகமாக தள்ளியதால் நிலைகுலைந்த அவர் கீழே விழுந்தார். அப்போது தான் முதலாவது மாடியில் உள்ள சன்சேடு பகுதியில் அவருடைய தலை அடித்ததில் உயிரிழந்து விட்டார்.

எங்கள் கண்முன்பே நடந்த இந்த சம்பவத்தை எங்களால் மறக்க முடியவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story