மாநில செய்திகள்

கோயம்பேட்டில் மருத்துவக்கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + The student committed suicide

கோயம்பேட்டில் மருத்துவக்கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

கோயம்பேட்டில் மருத்துவக்கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
சென்னை கோயம்பேட்டில் மருத்துவக்கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பூந்தமல்லி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்தவர் திருமால் (வயது 21). இவர் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கோயம்பேடு நெற்குன்றம், கிருஷ்ணா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார்.

நேற்று மதியம் திருமால், தனது தாய்க்கு போன் செய்வதற்காக வீட்டு உரிமையாளரிடம் இருந்து செல்போனை வாங்கி கொண்டு வீட்டிற்குள் சென்றார். பின்னர் அவர் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த வீட்டு உரிமையாளர், திருமால் தங்கியிருந்த மேல்மாடிக்கு சென்று பார்த்தபோது, அவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டார். திருமால், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டு உரிமையாளர் அலறினார்.

உடனே அங்கு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர், சம்பவம் குறித்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திருமாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, திருமால் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று கிடைத்தது.

அதில், ‘என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நான் இந்த உலகில் வாழக்கூடாது. அம்மா என்னை மன்னித்து விடுங்கள். அடுத்த ஜென்மத்தில் எனது அம்மாவை நான் நன்றாக பார்த்துக்கொள்வேன்’ என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதைப்போல வீட்டிற்குள் திருமால் ஏராளமான காதல் கவிதைகள் எழுதி வைத்துள்ளதும் தெரியவந்தது. எனவே காதல் தோல்வியால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, மாணவர் திருமால் நேற்று முன்தினமும் தனது கை மணிக்கட்டை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாகவும், அப்போது அவரை சக மாணவர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.