அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சிறப்பு வார்டில் ஆய்வு நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவு


அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சிறப்பு வார்டில் ஆய்வு நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவு
x
தினத்தந்தி 14 July 2018 12:00 AM GMT (Updated: 13 July 2018 10:26 PM GMT)

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த சிறப்பு வார்டில் விசாரணை ஆணையத்தின் வக்கீல்கள் ஆய்வு நடத்த அனுமதி அளித்து நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, 

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா தனது வாக்குமூலத்தை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளார்.

சசிகலாவின் உறவினர்கள், அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவர்கள், போயஸ் கார்டன் பணியாளர்கள் என 70-க்கும் மேற்பட்டவர்களிடம் ஆணையம் விசாரணை மேற்கொண்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஆணையத்தின் வக்கீல்கள் எஸ்.பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த சிறப்பு வார்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், ‘ஆணையத்தில் ஏற்கனவே ஆஜராகி சாட்சியம் அளித்தவர்களில் பெரும்பாலானோர், அப்பல்லோ மருத்துவமனையில் நடந்த நிகழ்வுகளையும், அங்குள்ள இயற்கை அமைப்புகளையும் ஒட்டியே சாட்சியம் அளித்துள்ளனர். எனவே, அப்பல்லோ மருத்துவமனையின் இயற்கை அமைப்பு என்ன?, உண்மை தன்மை என்ன? என்பதை ஆணையத்தின் தரப்பில் அறிந்து கொள்வது அவசியம்’ என்று கூறப்பட்டிருந்தது.

ஆய்வுக்கு அப்பல்லோ நிர்வாகம் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தது. அதன்பின்பு, சில நிபந்தனைகளுடன் அனுமதிப்பதாக உத்தரவாதம் அளித்தது. இதற்கிடையே, ஆய்வின் போது தங்கள் தரப்பையும் அனுமதிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பு வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர். அதேபோன்று செய்தியாளர்கள் தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி ஆறுமுகசாமி நேற்று தீர்ப்பு கூறினார். அதில் கூறியிருப்பதாவது:-

ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கண்காணிப்பு கேமராவை அகற்றி உள்ளது. முதல்-அமைச்சராக இருந்தவர் என்ற அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாகவும், அவர் மறைந்த பின்பு வெளியான வீடியோ அப்பல்லோ மருத்துவமனையில் தான் எடுக்கப்பட்டதா? இல்லையா? என்பதை அறிந்து கொள்ளவும் பொதுமக்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.

பொதுமக்களின் இந்த எதிர்பார்ப்பை புறக்கணிக்க முடியாது. எனவே, வருகிற 29-ந் தேதி இரவு 7 மணி முதல் 7.45 மணி வரை ஆணையத்தின் வக்கீல்கள் பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர் அப்பல்லோ மருத்துவமனையில் ஆய்வு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த ஆய்வின் போது சசிகலா தரப்பில் 2 வக்கீல்கள் மற்றும் ஆணையத்தின் செயலாளர் கோமளா ஆகியோரையும், பத்திரிகையாளர்கள் சார்பில் ஒரு போட்டோகிராபரையும் அனுமதிக்க வேண்டும்.

ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த அப்பல்லோ மருத்துவமனையின் 2-வது மாடியில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவு அறை எண்.2008, அங்குள்ள செவிலியர் அறை, கண்ணாடி அறை, அங்குள்ள வழிப்பாதை ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும். ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இருந்த இடம், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை மேற்பார்வையிட அமைக்கப்பட்ட அரசு மருத்துவர்கள் குழு, அரசு செயலாளர்கள் போன்றவர்கள் இருந்த இடம், ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அமைச்சர்கள், அதிகாரிகள், முக்கிய பிரமுகர்களுக்கு அவ்வப்போது மருத்துவர்கள் விளக்கிக்கூறிய இடம், சசிகலா, அவரது குடும்ப உறுப்பினர்கள் தங்கி இருந்த அறை ஆகியவற்றை அப்பல்லோ நிர்வாகம் காண்பிக்க வேண்டும்.

அந்த இடங்களில் ஆணையம் தரப்பு வக்கீல்கள் ஆய்வை மேற்கொள்ளலாம். ஆய்வின்போது ஆணையம் தரப்பு வக்கீல்கள் அப்பல்லோ நிர்வாகத்தினரிடம் விவாதிக்க அனுமதி கிடையாது. மேலும் அவர்களிடம், எந்தவித கேள்வியும் எழுப்பக்கூடாது. தேவையில்லாத விவாதத்தை தவிர்க்கவும், நோயாளிகளுக்கு தொந்தரவு ஏற்படக்கூடாது என்பதற்காகவும் இந்த நிபந்தனை விதிக்கப்படுகிறது.

ஜெயலலிதாவுக்கு உணவு தயாரித்து வழங்கப்பட்ட சமையல் அறையை வெளியில் இருந்து பார்வையிட அனுமதிக்கப்படுகிறது. எந்த காரணத்தை கொண்டும் ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட்ட இடம், தேதி, நேரம் ஆகியவற்றில் மாற்றம் செய்யப்பட மாட்டாது.

அறை எண்.2008-ல் ஆய்வு மேற்கொள்வதால் வருவாய் இழப்பு ஏற்படும் என்று அப்பல்லோ நிர்வாகம் கருதினால் ஒரு நாளுக்கான வாடகையை ஆணையத்தில் இருந்து பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Next Story