மாநில செய்திகள்

பேராசிரியை நிர்மலாதேவி மீது 1,160 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் + "||" + Professor Nirmaladevi filed a 1,160-page charge sheet

பேராசிரியை நிர்மலாதேவி மீது 1,160 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

பேராசிரியை நிர்மலாதேவி மீது 1,160 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பான வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி உள்பட 3 பேர் மீது 1,160 பக்க குற்றப்பத்திரிகையை விருதுநகர் கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி போலீசார் நேற்று தாக்கல் செய்தனர்.
விருதுநகர், 

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை அந்த கல்லூரியின் கணித பேராசிரியை நிர்மலாதேவி செல்போனில் தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஜெயிலில் அடைக்கப்பட்ட 3 பேரும் தொடர்ந்து பல்வேறு நிலைகளில் நீதிமன்றங்களில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்த வண்ணம் இருந்தனர்.

இதற்கிடையே, சி.பி.சி.ஐ.டி. போலீசார் பேராசிரியை நிர்மலாதேவியை சென்னைக்கு அழைத்துச்சென்று தடயஅறிவியல் துறையின் மூலம் குரல் பரிசோதனை நடத்தினர்.

பேராசிரியர் கருப்பசாமி மதுரை ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்து இருந்தார். அவரது ஜாமீன்மனுவை தள்ளுபடி செய்ததோடு இந்த வழக்கில் இந்த மாதம் 16-ந் தேதிக் குள் சி.பி.சி.ஐ.டி போலீசார், விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், முழு குற்றப்பத்திரிகையை செப்டம்பர் 10-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதில் இருந்து 6 மாதத்துக்குள் விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டப்பட்டது.

இதற்கிடையே சி.பி.சி.ஐ.டி துணை சூப்பிரண்டு முத்துசங்கரலிங்கம் நேற்று விருது நகர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி முன்னிலையில் இந்த வழக்கு தொடர்பான 1,160 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார். அதில் பேராசிரியை நிர்மலாதேவி, பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகிய 3 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துசங்கரலிங்கம் கூறியதாவது:-

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி, பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகிய 3 பேருக்கும் தொடர்பு இருப்பதால், அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 370 (தவறான பாதைக்கு அழைத்தல்), 511 (அதற்கான முயற்சி), பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம், விபசார தடுப்புச்சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஐகோர்ட்டு விதித்துள்ள காலக்கெடுவுக்குள் அடுத்த குற்றப்பத்திரிகையையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிடுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.