நாடாளுமன்றத்தை மீண்டும் முடக்க அ.தி.மு.க. திட்டம் எம்.பி.க்கள் கூட்டத்தில் முடிவு


நாடாளுமன்றத்தை மீண்டும் முடக்க அ.தி.மு.க. திட்டம் எம்.பி.க்கள் கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 16 July 2018 11:00 PM GMT (Updated: 16 July 2018 8:47 PM GMT)

அணை பாதுகாப்பு, இந்திய கல்வி ஆணைய மசோதாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தை மீண்டும் முடக்க அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை(புதன்கிழமை) கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோரது தலைமையில் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் 40 பேர் பங்கேற்றனர். அ.தி.மு.க. எம்.பி.யான நாடாளுமன்ற துணை சபாநாயகர் ப.தம்பிதுரை, அன்வர் ராஜா, எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், சத்யபாமா உள்பட 8 எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை.

மாலை 4.50 மணிக்கு தொடங்கிய கூட்டம் மாலை 5.40 மணியளவில் முடிவடைந்தது.

மத்திய அரசின் அணை பாதுகாப்பு சட்டம், இந்திய உயர்கல்வி ஆணையம் ஆகியவற்றிற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எனவே நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த சட்ட மசோதா மீதான விவாதம் நடைபெற்றால் அ.தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்.

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைக்காக நாடாளுமன்றத்தை முடக்கியது போன்று செயல்பட வேண்டும். மாநிலத்தின் உரிமைகளுக்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டும் போன்ற ஆலோசனைகளும் அ.தி.மு.க. எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்டது.

இதுதொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறும்போது, ‘அணை பாதுகாப்பு, இந்திய உயர்கல்வி ஆணையம் எதுவாக இருந்தாலும் சரி, எந்தவிதத்திலும் மாநிலத்தின் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம். ஜெயலலிதா வழியில் அதை பாதுகாத்து வருகிறோம். மாநில நிர்வாகத்தை கலந்து ஆலோசிக்காமல், மாநில உரிமை பறிக்கும் எந்த செயல் மற்றும் திட்டத்துக்கும் அ.தி.மு.க.வின் ஆதரவு என்றும் இருக்காது’ என்றார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்த போது கட்சி தொண்டர்கள் எண்ணிக்கை 1.5 கோடியாக இருந்தது. அவரது மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவால் உறுப்பினர்கள் எண்ணிக்கை பாதியாக குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. எனவே அதுகுறித்து விவாதிப்பதற்காக அ.தி.மு.க. நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் மாலை 5.50 மணிக்கு தொடங்கி இரவு 7.15 மணி வரை நடந்தது.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும். மீண்டும் 1.5 கோடி என்ற இலக்கை அடைய வேண்டும் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அறிவுறுத்தினர். இதையடுத்து கூட்டம் முடிவடைந்தவுடன் அ.தி. மு.க. மாவட்ட செயலாளர்கள் உறுப்பினர் சேர்க்கை படிவங்களை பண்டல், பண்டலாக வாங்கிச்சென்றனர்.

அ.தி.மு.க. உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, ‘அ.தி.மு.க. உறுப்பினர்கள் சேர்க்கையில் விரைவில் இலக்கை எட்டுவோம்’ என்று பதிலளித்தார். தற்போது அ.தி.மு.க.வில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு, அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

கூட்டம் முடிவடைந்தவுடன் வேலூர் கிழக்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த 250 பேர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரது முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். 

Next Story