தி.மு.க. ஆட்சியில் விஞ்ஞானரீதியில் டெண்டர் முறைகேடு அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


தி.மு.க. ஆட்சியில் விஞ்ஞானரீதியில் டெண்டர் முறைகேடு அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 16 July 2018 11:45 PM GMT (Updated: 16 July 2018 10:16 PM GMT)

தி.மு.க. ஆட்சியில் விஞ்ஞானரீதியில் நடந்த டெண்டர் முறைகேடு குறித்து அரசு நடவடிக்கை எடுக்க தயார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை, 

அ.தி.மு.க. அலுவலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- வருமான வரி சோதனை முறையாக நடக்கவேண்டும். முதல்-அமைச்சர் பினாமிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை வேண்டும் என தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டனில் இருந்து அறிக்கை வெளியிட்டு உள்ளாரே?

பதில்:- சென்னையில் அறிக்கை போர் நடத்தினார். அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டினார். இங்கு வேலைக்கு ஆகவில்லை என்பதால், லண்டன் போய் அறிக்கை அனுப்பியுள்ளார். மு.க.ஸ்டாலின் முதலில் தனது முகத்தை நிலைக்கண்ணாடியில் பார்க்கவேண்டும். இதை சொல்வதற்கு அவருக்கு அருகதை இல்லை.

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் எப்படிப்பட்ட முறைகேடு நடந்தது? என்பதை நான் தெளிவாக சொல்கிறேன். 17.5.2010 தினத்தன்று ஈரோட்டில் உள்ள ராமலிங்கம் அன்ட் கம்பெனிக்கு மட்டும் ஒரே நாளில் 4 டெண்டர்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த அந்த காலத்தில், பொதுப்பணித்துறையும் இருந்தது. அதில் நீர் ஆதாரத்துறையில் 4 பணிகளை ஒருவருக்கு ஒரே நேரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அது முறைகேடு இல்லையா? தான் ஒன்று செய்துவிட்டு, அடுத்தவரை குறைகூறுவது எப்படி?

அ.தி.மு.க. ஆட்சியில் கட்டுமான பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகைகளை விட அதிக செலவு செய்யப்படுவது கிடையாது. ஆனால் தி.மு.க. ஆட்சி காலத்தில் ஒவ்வொரு கட்டிடத்துக்கும் 19.73 சதவீதம் கூடுதலாகவே செலவிடப்பட்டு உள்ளது.

தி.மு.க. ஆட்சியில் கூடுதல் தொகைக்கு டெண்டர் விடப்பட்டது. ஆனால் இதுபோல ஒரு காரியத்தை அ.தி.மு.க. ஆட்சியில் யாரும் செய்தது கிடையாது.

தற்போது யார் வேண்டுமானாலும் ஆன்-லைனில் டெண்டர் கோரிக்கை விடலாம். அதில் யார் குறைவான மதிப்பை காட்டியிருக்கிறார்களோ, அவர்களுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்படும் நடவடிக்கை வெளிப்படை தன்மையுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இதில் எந்த முறைகேடும் இல்லை.

2006-2011 இடையிலான தி.மு.க. ஆட்சியில் ஒரே நபருக்கு 185 டெண்டர்கள் விடப்பட்டு இருக்கின்றன. அதாவது தி.மு.க. ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறையில் ஒற்றை சாரள டெண்டர்’ விட்டிருக்கிறார்கள். வேறு யாருக்கும் எந்த வாய்ப்புமே அளிக்கவில்லை. நீர் ஆதாரத்துறையிலும் கூடுதல் தொகைக்கு டெண்டர் விடப்பட்டு இருக்கிறது. எனவே அந்த கூடுதல் தொகையெல்லாம் யாருக்கு சென்றது? நீங்களே புரிந்து கொள்ளுங்கள். மு.க.ஸ்டாலின் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இப்படி பேசி வருகிறார் என்று நினைக்கிறேன்.

சென்னையில் பாலங்கள் கட்டினோம் என்று மார்தட்டி கொள்கிறார்களே, இதுகுறித்து பீட்டர் அல்போன்ஸ்(காங்கிரஸ் நிர்வாகி) 2006-ம் ஆண்டு ஒரு புத்தகமே தயாரித்து எல்லா எம்.எல்.ஏ.க்களுக்கும் அளித்துள்ளார். சென்னையில் கட்டப்பட்ட பாலங்களில் எப்படி விஞ்ஞானரீதியில் ஊழல் நடந்திருப்பது என்பது அதில் தெரியவரும். அதாவது ரூ.100 மதிப்புள்ள ஒரு பொருளுக்கு ரூ.150 என்று விலைகட்டி, அதை டெண்டருக்கு விட்டு, ரூ.120-க்கு முடிவு செய்கிறார்கள். பின்னர் ரூ.30 மிச்சம் செய்துவிட்டோம் என்று தம்பட்டம் அடித்து பெருமை பேசுகிறார்கள். இதைத்தான் விஞ்ஞானரீதியான ஊழல் என்று குறிப்பிட்டேன்.

கேள்வி:- 7 ஆண்டு கால ஆட்சிக்காலத்தில் இந்த முறைகேடு குறித்து விசாரிக்காதது ஏன்?

பதில்:- டெண்டர் விவகாரத்தில் நூதனத்தை கையாண்டு, தொழில்நுட்ப யுக்திகள் மூலம் எல்லாத்தையும் சரிகட்டி இருக்கிறார்கள். அதற்கேற்றாற்போல செலவு கணக்கையும் காட்டியிருக்கிறார்கள். விசாரணை நடத்துவதில் எங்களுக்கு எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது. தேவைப்பட்டால் அதற்கும் தயார்.

கேள்வி:- தமிழகத்தில் நடக்கும் வருமான வரி சோதனைக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமா?

பதில்:- வருமான வரி முறைகேடு குறித்து உறுதியான தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் சோதனை நடத்துகிறார்கள். இது அவர்களது கடமை. இதற்கு ஏன் அரசியல் தலையீடு இருக்க போகிறது? முறைகேட்டுக்கும், வருமான வரி சோதனைக்கும் வித்தியாசம் உள்ளது.

கேள்வி:- சோதனை நடத்தப்படும் காண்டிராக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்:- குற்றம் உறுதி செய்யப்பட்டால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். அதில் மாற்றுக்கருத்து கிடையாது. தவறுக்கு தண்டனை நிச்சயம் கிடைக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story