முதல்-அமைச்சர் பற்றி முகநூல் பக்கத்தில் அவதூறு தகவல் வாலிபர் கைது


முதல்-அமைச்சர் பற்றி முகநூல் பக்கத்தில் அவதூறு தகவல் வாலிபர் கைது
x
தினத்தந்தி 17 July 2018 8:49 PM GMT (Updated: 17 July 2018 8:49 PM GMT)

முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பற்றி முகநூலில் அவதூறு தகவல்களை வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த சுரே‌ஷ்குமார் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

‘மன்னை சிவா’ என்று பெயரிடப்பட்ட முகநூலில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பற்றி அவதூறாகவும், தரக்குறைவாகவும், கொச்சையாகவும், பொய்யான தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுபோன்ற தகவல்கள் முகநூல் பயன்படுத்தும் ஏராளமானோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகும். மன்னை சிவா என்ற பெயரில் முகநூல் பதிவிடுவோரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதே போல் சென்னையை சேர்ந்த சுதா, ரேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோரும் தங்களை ஆபாசமாக சித்தரித்து மன்னை சிவா என்ற பெயரில் செயல்படும் முகநூல் பக்கத்தில் தகவல் வெளியாகியுள்ளது என்றும், அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும் 2 புகார் மனுக்கள் கமி‌ஷனர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது.

இந்த புகார் மனுக்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணை முடிவில், மன்னை சிவா என்ற பெயரில் முகநூல் கணக்கு வைத்திருந்த திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் உள்ள வெட்டிக்காடு என்ற ஊரை சேர்ந்த சிவகுமார் என்ற வாலிபர் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சிவகுமார் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஒரு வழக்கில் அவர் முன்ஜாமீன் பெற்றுவிட்டார். தற்போது 2-வது வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 3-வது வழக்கிலும் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் வகையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் போலீசார் தெரிவித்தனர். 

Next Story