சென்னை திரிசூலம் மலையடிவாரத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது குடிசைக்குள் குண்டுபாய்ந்து ஒருவர் காயம்


சென்னை திரிசூலம் மலையடிவாரத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது குடிசைக்குள் குண்டுபாய்ந்து ஒருவர் காயம்
x
தினத்தந்தி 31 July 2018 11:10 PM GMT (Updated: 31 July 2018 11:10 PM GMT)

சென்னையை அடுத்த திரிசூலம் மலையடிவாரத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது குடிசை வீட்டுக்குள் பாய்ந்த குண்டு வீட்டில் படுத்திருந்த மாநகராட்சி ஊழியர் காலில் பட்டு காயம் ஏற்பட்டது.

தாம்பரம்,

சென்னை விமான நிலையம் எதிரில் உள்ள திரிசூலம் மலையடிவாரத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் உள்ளது. இங்கு ரெயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் காலை துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

பல்லாவரம் ஈஸ்வரிநகர் மெயின் ரோட்டில் வசிப்பவர் ராஜேந்திரன் (வயது40). சென்னை மாநகராட்சி ஊழியரான இவர் நேற்று முன்தினம் பகல் 11 மணியளவில் தனது குடிசை வீட்டில் படுத்திருந்தார். அப்போது குடிசையின் மேல் பகுதியில் இருந்துவந்த ஏதோ ஒரு இரும்பு பொருள் வலது காலில் தாக்கியதில் ரத்தம் கொட்டியது.

துப்பாக்கி குண்டு

உடனே வீட்டில் இருந்த அவரது மனைவி மில்கா அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு காலில் எக்ஸ்ரே எடுத்த டாக்டர்கள் அவருக்கு காயம் ஏற்பட்ட இடத்தில் கட்டு போட்டு, மறுநாள் சிகிச்சைக்கு வருமாறு அனுப்பிவிட்டனர்.

இந்நிலையில் வீட்டிற்கு வந்த ராஜேந்திரன் வலியால் துடித்தார். காலில் அடிபட்ட இடத்தில் இருந்து ரத்தம் வந்துகொண்டிருந்தது. உடனே அவரது மனைவி பார்த்தபோது காயம் ஏற்பட்ட இடத்தில் ஒரு இரும்பு துண்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பார்த்தபோது துப்பாக்கி குண்டு காலில் பாய்ந்து இருந்தது தெரியவந்தது.

போலீசில் புகார்

அதை வெளியில் எடுத்து சிகிச்சை அளித்த டாக்டர், துப்பாக்கி குண்டு என்பதால் போலீசில் தகவல் தெரிவிக்கும்படி கூறினார். இதனைத்தொடர்ந்து துப்பாக்கி குண்டுடன் பல்லாவரம் போலீசில் ராஜேந்திரன் புகார் செய்தார். பல்லாவரம் போலீஸ் உதவி கமிஷனர் தேவராஜ், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் இதுதொடர்பாக விசாரணை நடத்தி துப்பாக்கி குண்டை தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

திரிசூலம் மலையடிவாரத்தில் 2 துப்பாக்கி சுடும் பயிற்சி தளங்கள் உள்ளது. ராணுவம் பயிற்சி பெறும் தளம் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் உள்ளது. மற்ற துறையினர் திறந்தவெளியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் பயிற்சி பெறுகின்றனர். இதனால் அடிக்கடி துப்பாக்கி குண்டுகள் குடியிருப்பு பகுதிகளில் விழுந்து பாதிப்பு ஏற்படுகிறது.

ரெயில்வே பாதுகாப்புபடை

ரெயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் இந்த பகுதியில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் தான் ராஜேந்திரன் வீட்டில் படுத்திருந்தபோது காலில் குண்டு பாய்ந்துள்ளது. அந்த குண்டை தடய அறிவியல் பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் நேற்று பயிற்சிக்கு நாங்கள் யாரையும் அனுமதிக்கவில்லை.

விபத்துகள் அடிக்கடி நடைபெறுவதால் திறந்தவெளியில் போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யாமல் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு பரிந்துரைத்துள்ளோம். ராஜேந்திரன் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது தொடர்பாக விசாரணைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். 

Next Story