ஊழல், முறைகேடுகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் இடமில்லை- அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா


ஊழல், முறைகேடுகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில்  இடமில்லை- அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா
x
தினத்தந்தி 3 Aug 2018 9:02 AM GMT (Updated: 3 Aug 2018 9:02 AM GMT)

ஊழல், முறைகேடுகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் இடமளிக்க முடியாது என அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா கூறி உள்ளார்.

சென்னை

அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேடு விவகாரம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களிடமிருந்து பேப்பருக்கு ரூ.10 ஆயிரம் பெற்று அவர்களுக்கு கூடுதல் மார்க் வழங்கியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய பேராசிரியை உமா மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த முறைகேடு மூலமாக இதுவரை 200 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டிருக்கிறது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மறுகூட்டலின் போது உமாவின் பேச்சை கேட்காத ஆசிரியர்களை உமா, அதிரடியாக பணியில் இருந்து நீக்கிவிட்டு தனது ப்ராடு வேலைக்கு ஒத்துழைக்கும் ஆசிரியர்களை மட்டுமே பணியில் அமர்த்தி இந்த ஹைடெக் ஊழலை செய்து வந்துள்ளார். இது சம்பந்தமாக உமா உட்பட பல பேராசிரியர்களை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறு மதிப்பீடு முறைகேடு விவகாரத்தில்   தேர்வு கட்டுப்பாட்டாளர் உமா சஸ்பெண்ட் செய்யபட்டு உள்ளார்.

 விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியின் முதல்வர் பொறுப்பில் இருந்து விஜயகுமார் நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இந்த விவகாரத்தில் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு புகாரில் தொடர்புடைய அனைவரின் மீது நடவடிக்கை உறுதி.  ஊழல், முறைகேடுகளுக்கு அண்ணா பல்கலை.யில் இடமளிக்க முடியாது. வெளிப்படைத் தன்மைக்காக, தேவைப்பட்டால் தேர்வுத்துறையில் மாற்றங்கள் செய்யப்படும். மறுமதிப்பீட்டிற்கு வசூலிக்கப்படும் பணம் முறையாக செலவிடப்படுகிறதா என்பது கண்காணிக்கப்படும். முறைகேடுகள் நடக்க சமூகமும் ஒருவகையில் காரணம். நடந்த முறைகேடுகள் அனைத்தும் முன்னாள் மாணவர்கள் சம்பந்தப்பட்டது.

லஞ்ச ஒழிப்புத்துறையில் இருந்து கிடைத்த முதல் தகவல் அறிக்கையின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது  சட்டரீதியான வெளிப்படையான நடவடிக்கை எடுக்கப்படும்.   விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேட்டில் பெரிய நெட்வொர்க் இருப்பதாக கருதுகிறேன். தேர்வு, விடைத்தாள் திருத்தல் ஆகியவற்றில் விருப்பு வெறுப்பற்ற நிலை தேவை என வலியுறுத்துகிறேன் என கூறினார்.

Next Story