லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் கற்பூரசுந்தர பாண்டியன், ஏ.கே.விஸ்வநாதன் உள்பட 6 பேருக்கு விருது


லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் கற்பூரசுந்தர பாண்டியன், ஏ.கே.விஸ்வநாதன் உள்பட 6 பேருக்கு விருது
x
தினத்தந்தி 5 Aug 2018 10:00 PM GMT (Updated: 5 Aug 2018 9:24 PM GMT)

லயோலா கல்லூரியில் படித்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கற்பூரசுந்தர பாண்டியன், சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்பட 6 பேருக்கு மாணவர்கள் சங்கம் சார்பில் விருது வழங்கப்பட்டது.

சென்னை, 

சென்னை நுங்கம்பாக்கத்தில் லயோலா கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் படித்த மாணவ-மாணவிகளில் பலர் அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி வருகின்றனர்.

இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் தினவிழா கல்லூரியில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முன்னாள் மாணவ-மாணவிகள் வந்திருந்தனர். அவர்கள் பழைய நண்பர்களை பார்த்து நெகிழ்ச்சியுடன் கைகுலுக்கி கொண்டனர். தங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களின் பெயர்களை கூறி நினைவு கூர்ந்தனர். வந்திருந்தவர்கள் மலரும் நினைவுகளுடன் தாங்கள் படித்த வகுப்பிற்கும் சென்று மகிழ்ந்தனர்.

அப்போது அவர்கள் தாங்கள் மாணவர்களாக படித்த காலத்தில் மேடையில் பாட்டுப்பாடியதையும், பாடம் படித்ததையும் நினைவு கூர்ந்தனர். முன்னாள் மாணவர்கள் கூறுகையில், “இந்த கல்லூரியில் கற்றுக்கொண்ட நேர்மை, காலந்தவறாமை, ஒழுக்கம், ஆங்கிலப் புலமை ஆகியவை வாழ்க்கையில் எங்களுக்கு துணை நிற்கிறது” என்று பெருமையுடன் கூறினர். விழாவில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், முன்னாள் மாணவர்கள் 6 பேருக்கு விருதும் வழங்கப்பட்டது.

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கற்பூர சுந்தரபாண்டியன், சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், தொழில் அதிபர் எல்.ராம்குமார், முன்னாள் விளையாட்டு வீரர் வாசுதேவன் பாஸ்கரன், பார்வையற்ற இளங்கோ மற்றும் சேவியர் பிரிட்டோ ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

விருதுகளை லயோலா கல்லூரியின் அதிபர் ஜெயபதி பிரான்சிஸ் அடிகளார் வழங்கினார். லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் ஜி.விஸ்வநாதன் உள்பட பலர் பேசினர்.

விழாவில் கல்லூரியின் செயலாளர் செல்வநாயகம் அடிகளார், கல்லூரி முதல்வர் ஆண்ட்ரூ அடிகளார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நிறைவில் முன்னாள் மாணவர்கள் சங்க இயக்குனர் தாமஸ் அடிகளார் நன்றி கூறினார்.

Next Story