மாநில செய்திகள்

நாகர்கோவிலில் பயங்கரம் 2 குழந்தைகளை கொன்று பெண் தற்கொலை + "||" + Woman killed by killing children

நாகர்கோவிலில் பயங்கரம் 2 குழந்தைகளை கொன்று பெண் தற்கொலை

நாகர்கோவிலில் பயங்கரம் 2 குழந்தைகளை கொன்று பெண் தற்கொலை
நாகர்கோவிலில் தனது 2 குழந்தைகளை கொன்று விட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில், 

நாகர்கோவிலில் தனது 2 குழந்தைகளை கொன்று விட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில் எஸ்.எல்.பி. தெற்கு தெருவை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 37). இவருடைய மனைவி சரண்யா (32). இந்த தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ரிப்கா (4) என்ற மகளும், ஐசக் ஆபிரகாம் (2) என்ற மகனும் இருந்தனர். அருணாசலம் ஆட்டோ ஓட்டி வருகிறார். ரியல் எஸ்டேட் வேலையும் செய்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு சவாரிக்காக வீட்டில் இருந்து புறப்பட்ட அருணாசலம் 7 மணி அளவில் மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் மெயின் ஹாலில் ரிப்காவும், ஐசக் ஆபிரகாமும் மூச்சு பேச்சு இன்றி அருகருகே கிடந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் சரண்யாவிடம் கேட்டபோது அவர் எந்த பதிலும் சொல்லாமல் பிரம்மை பிடித்தவர் போல காணப்பட்டார்.

இதனால் சந்தேகம் அடைந்த அருணாசலம் உடனே செல்போனை எடுத்துக் கொண்டு வெளியே சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் வீட்டுக்குள் வந்தபோது வீட்டில் உள்ள மின் விசிறியில் சரண்யா தூக்கில் பிணமாக தொங்கினார். மேலும் தன் 2 குழந்தைகளும் பிணமாக கிடந்தது அவருக்கு தெரியவந்தது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த கோட்டார் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து போலீசார் அருணாசலத்திடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். மதுபோதைக்கு அடிமையான அருணாசலம் வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.

இதனால் கணவனுக்கும், மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் பல நாட்களாகவே மனவேதனையில் இருந்த சரண்யா, தற்கொலை முடிவை எடுத்தார்.

தனக்கு பிறகு குழந்தைகளை கவனிக்க யாரும் இல்லையே? என்று நினைத்த அவர் தனது சேலையால் இரு குழந்தைகளின் கழுத்தை இறுக்கியும், தலையணை மூலம் முகத்தை அழுத்தியும் கொன்று விட்டு தனது உயிரையும் மாய்த்துள்ளார். அவர் தற்கொலை செய்வதற்கு முன், தன் பெற்றோருக்கு போன் செய்து அழுததாக தெரிகிறது.

மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக அருணாசலம் மீது கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், இருவருக்கும் திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் நாகர்கோவில் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார்.

முன்னதாக சரண்யாவும், குழந்தைகளும் இறந்துபோன சோகத்தில் இருந்த அவரது உறவினர்கள் ஆத்திரத்தில் அருணாசலத்தை அடித்து உதைத்தனர். இதனால் காயம் அடைந்த அருணாசலத்தை போலீசார் அவர்களிடம் இருந்து மீட்டு அழைத்து சென்றனர்.