கருணாநிதி உடல் நிலையில் பின்னடைவு: எழுந்து வா தலைவா, எழுந்துவா தலைவா, என தொண்டர்கள் கோஷம்


கருணாநிதி உடல் நிலையில் பின்னடைவு: எழுந்து வா தலைவா, எழுந்துவா தலைவா, என தொண்டர்கள் கோஷம்
x
தினத்தந்தி 6 Aug 2018 2:40 PM GMT (Updated: 2018-08-06T20:10:15+05:30)

கருணாநிதி உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டதையடுத்து, தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவியத்துவங்கியுள்ளனர். #CauveryHospital #KarunanidhiHealth

சென்னை,

வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது. இதைத்தொடர்ந்து நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கருணாநிதியின் உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 10 நாட்கள் ஆகின்றன.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி , மத்திய மந்திரிகள், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு உள்பட உள்பட பல்வேறு தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும்  ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் அஜித் உள்பட திரையுலக பிரபலங்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து உடல்நலம் விசாரித்து சென்றனர்.

10-வது நாளாக  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில், திடீர் பின்னடைவு ஏற்பட்டது. இதனால், கடந்த சில நாட்களாக தொண்டர்கள் வருகை குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியிருந்த காவேரி மருத்துவமனை வளாகம் மீண்டும் பரபரப்பான சூழலுக்கு திரும்பியது. திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு முதன் முறையாக அவரது மனைவி தயாளு அம்மாள் இன்று வருகை தந்தார்.

இந்த நிலையில், இன்று மாலை 6.30 மணிக்கு காவேரி மருத்துவமனை , திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை  குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ”முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவரின் வயதுமூப்பின் காரணமாக முக்கிய உடல் உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளது. மருத்துவ உதவிகளுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து கருணாநிதி கண்காணிக்கப்படுவார். அடுத்த 24 மணி நேரத்திற்கு அவரின் உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதைப் பொறுத்தே கணிக்க முடியும்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இதையடுத்து, காவேரி மருத்துவமனைக்கு திமுக நிர்வாகிகள் வருகை அதிகரித்தது. திமுக தொண்டர்களும் காவேரி மருத்துவமனையில் குவியத்துவங்கினர். இதனால், ஆழ்வார்பேட்டை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  தொண்டர்கள் வருகை நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்துக்கொண்டே இருப்பதால், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவமனைக்கு வெளியே குவிந்துள்ள தொண்டர்கள்,  தங்களது தலைவர் நிச்சயம் நல்ல உடல்நலத்துடன் திரும்புவார் என்ற நம்பிக்கையோடு காத்திருப்பதாக தெரிவித்தனர். மேலும், எழுந்து வா தலைவா, எழுந்து வா தலைவா, என உணர்ச்சிப்பெருக்குடன் கோஷங்களை  தொண்டர்கள்  தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். 

Next Story