கருணாநிதியின் சாதூர்ய பேச்சும் நகைச்சுவை பேச்சும்


கருணாநிதியின் சாதூர்ய பேச்சும் நகைச்சுவை பேச்சும்
x
தினத்தந்தி 7 Aug 2018 2:11 PM GMT (Updated: 7 Aug 2018 2:11 PM GMT)

சட்டசபை விவாதங்களிலும் எப்போதும் சிறப்பாக செயல்பட கூடியவர் கருணாநிதி. கருணாநிதியின் சாதூர்ய பேசக்கூடியவர்


சென்னை

* சட்டசபை விவாதங்களிலும் எப்போதும் சிறப்பாக செயல்பட கூடியவர் கருணாநிதி. ஒரு முறை, "தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருவறைக்குள் செல்ல உரிமை இல்லையே" என்று பேசிக்கொண்டிருந்த கருணாநிதியைப் பார்த்து, "கோயிலுக்கே போகாத கருணாநிதிக்கு இதுபற்றி எதற்குக் கவலை?" என்றார் இந்திய தேசிய காங்கிரஸை சேர்ந்த டி.என்.அனந்தநாயகி. "கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குப் போகிறார்கள். வாதாடுபவர்களும் தானே போக வேண்டும்?" என்றவர் கருணாநிதி.

* கருணாநிதி முதன்முறையா சட்டமன்றத்தில் பேசிவிட்டு அமர்ந்ததும், அப்போது சட்டப்பேரவை தலைவராக இருந்த யு. கிருஷ்ணாராவ் ஒரு காகிதத்தில், 'Very Good Speech' என்று எழுதி கொடுத்தார்.

*  எம்.ஜி.ஆர் ஆட்சியில், தமிழக சட்டசபை சபாநாயகராக க.ராஜாராம் இருந்தார். அப்போது ஒரு விவாதத்தின் போது, எதிர்க்கட்சியான தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து முழக்கமிடுகின்றனர். கூச்சலை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார் சபாநாயகர். ஆனால் கூச்சல் குறையவில்லை. "எப்படியோ போங்க. இனி உங்களை அந்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்" என்று கூறிவிட்டு அமைதியாகி விட்டார் சபாநாயகர். அதன்பின் எழுந்த கருணாநிதி "இவங்களை எல்லாம் ஆண்டவன்தான் காப்பாத்தணும்னு நீங்க சொன்னீங்க. அதான் நான் எல்லோரையும் அமைதிப்படுத்தினேன். ஏன்னா, இதற்கு முன்பு ஆண்டவன் (ஆட்சியில் இருந்தவன்) நான்தானே" என்கிறார். இது போன்ற பல நகைச்சுவையான தருணங்கள் அவரது சட்டமன்ற வரலாற்று பக்கத்தில் உள்ளது.

*  அரசியல் விமர்சனங்களை எள்ளலுடன் எதிர்கொள்ளக் கூடியவர் கருணாநிதி. டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை ஒரு மணி நேரம் குறைத்தது குறித்து கருத்து தெரிவித்து இருந்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ், "நான் கேட்டது அறுவை சிகிச்சை... கருணாநிதி செய்ததோ முதலுதவி" என்று கூறி இருந்தார். இது தொடர்பாக பதில் அளித்த கருணாநிதி, "அறுவை சிகிச்சைக்கு முன்னர் முதலுதவிதான் அவசியம். சாதாரணமாக எல்லாருக்கும் தெரிந்த விஷயம் மருத்துவம் படித்த மருத்துவருக்கு புரியாமல் இருப்பது ஆச்சர்யம்" என்றார்.

* ஒரு முறை சட்டமன்றத்தில், மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி. சாமி பேச எழுந்த போது, அவரை சுருங்க பேச சொல்வதற்காக, ' அயிரை மீன் அளவுக்குப் பேசவும்' என்று துண்டு சீட்டு எழுதி கொடுத்தார் கருணாநிதி.

*  நெருக்கடி நிலை காலகட்டத்தில் பத்திரிகைகளுக்கு தணிக்கை முறை அமலில் இருந்ததால், கைதுசெய்யப்பட்ட தி.மு.கவினரின் பட்டியலை வெளியிட யுக்தி ஒன்றைக் கடைப்பிடித்தார் கருணாநிதி. 1976 பிப்ரவரி 3ஆம் தேதி அண்ணா நினைவு நாளன்று அண்ணா சதுக்கத்திற்கு மலர் வளையம் வைக்க வர இயலாதோர் பட்டியல் என்று ஒரு பட்டியலை வெளியிட்டார். அதில் மாவட்டவாரியாக கைதுசெய்யப்பட்டவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது.

Next Story