கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய சென்னை ஐகோர்ட் அனுமதி


கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய சென்னை ஐகோர்ட் அனுமதி
x
தினத்தந்தி 8 Aug 2018 5:24 AM GMT (Updated: 8 Aug 2018 5:29 AM GMT)

கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கி உள்ளது.

சென்னை

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 95.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என அக்கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.  இதுபற்றிய திமுகவின் மனு மீது நேற்று இரவு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷின் வீட்டில் வைத்து விசாரணை நடைபெற்றது.

இந்த மனு மீது பதிலளிக்கும்படி இன்று காலை 8 மணிக்கு தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் தி.மு.க. தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் தொடங்கியது.

காந்தி மண்டபம் அருகே திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதை மரியாதைக்குரியதாக கருத முடியாது 
சட்டத்திற்கு உட்படாத காரணங்களைக் கூறி தமிழக அரசு அனுமதி மறுக்கிறது.

எனது வாழ்வும், ஆன்மாவும் கருணாநிதிதான் என அண்ணாவே கூறியிருக்கிறார். மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்காவிடில் மக்களின் மனம் புண்படும்.

எம்.ஜி.ஆர் இறந்தபோது அண்ணா சமாதி அருகில் இடம் ஒதுக்கப்பட்டது, அதேபோல தான் ஜெயலலிதாவும் அடக்கம் செய்யப்பட்டார் .  13 முறை எம்எல்ஏவாக இருந்த கருணாநிதிக்கு, மெரினாவில் இடம் ஒதுக்காவிட்டால் தொண்டர்கள் உணர்வுகளை புண்படுத்தும். காமராஜர், ராஜாஜி ஆகியோர் கொள்கைக்கும், திராவிட இயக்க தலைவர்கள் கொள்கைகளுக்கும் வித்தியாசம் உள்ளது. காமராஜரை காங்கிரஸ் அலுவலகத்தில் தான் அடக்கம் செய்ய முடிவெடுத்தார்கள். 1988 அரசு உத்தரவுபடி ஏற்கனவே மெரினாவை மயானமாகவும், நினைவிடமாகவும் அறிவித்துள்ளது சென்னை மாநகராட்சி. அந்த பகுதியில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய கோருகிறோம்.

ஜெயலலிதா உடலை அடக்கம் செய்யும்போது எந்த சட்ட சிக்கலும் இல்லை என அரசு கூறியது. தற்போது சட்ட சிக்கல் இருப்பதாக கூறும் அரசு, அவை என்ன என கூறவில்லை. அண்ணா சமாதி வளாகத்தில் உடலை அடக்கம் செய்ய மட்டுமே அனுமதி கோருகிறோம். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை ஒதுக்க மத்திய அரசின் அனுமதி தேவையில்லை. கருணாநிதி கருத்துக்கு எதிராக மனுதாக்கல் செய்வது அவருக்கு அவமரியாதையாகும். 

முதல்வர், முன்னாள் முதல்வர்களை அவர்களுக்கு வழங்கப்படும்  புரோட்டோகால் அடிப்படையிலேயே வேறுபடுத்தப்பட்டுள்ளனர் என வாதாடினார்.

அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடும் போது:-

ஜானகி இறந்தபோது எம்.ஜி.ஆர். சமாதி அருகில் இடமளிக்க முடியாது என கருணாநிதி எழுதிய உத்தரவு உள்ளது என நகலை தாக்கல் செய்தார். "முந்தைய கால நிகழ்வுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" திமுக தலைவர் கருணாநிதியை காந்திமண்டபம் பகுதியில் அடக்கம் செய்வது வேண்டாம் என்பதன் மூலம் காந்தி, காமராஜர், பக்தவசலம் போன்றோரை அவமதிப்பதற்கு சமம். கண்ணியமற்ற என்ற வார்த்தை தலைவர்களை  அவமதிப்பதாகும். திமுக தலைவர் கருணாநிதியின் உடலை காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலத்தில் அடக்கம் செய்வது மரியாதைக்குரியது இல்லையா? அடக்கம் செய்ய நிலம் ஒதுக்க கோரும் உரிமை யாருக்கும் இல்லை.  

அரசு பாகுபாடு காட்டுகிறது என்ற புகாருக்கு முகாந்திரமில்லை. மெரினாவில் இடமளிக்க மறுப்பது சட்டப்பிரிவு 14ஐ எப்படி மீறுவதாகும். அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என கோருவதற்கு யாருக்கும் உரிமையில்லை.

"மெரினாவில் நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்த வழக்குகள் வாபஸ் பெற்ற பின் சட்ட சிக்கல் என்ன உள்ளது?" உங்கள் பதிலில் சட்டசிக்கல், வழக்கு நிலுவையில் உள்ளது என்றீர்கள். ஆனால் இப்போது வழக்கு நிலுவையில் இல்லையே சட்ட சிக்கல் இருப்பதாக சொல்லிவிட்டு அதற்கு முரணாக வாதிடுகிறீர்களே.முதல்வர்களை மெரினாவில் புதைக்கலாம் என புரோட்டோகால் சொல்லவில்லையே.

"முதல்வர்களை மெரினாவில் அடக்கம் செய்யலாம் என மத்திய அரசின் நெறிமுறைகளில் கூறப்படவில்லை". மெரினாவில் திமுக தலைவர்  கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி கோரும் மனு மீது உடனடியாக  தீர்ப்பளிக்க கூடாது. செய்திக்குறிப்பு என்பது அரசாணை கிடையாது, அதை எதிர்த்து முறையீடு செய்ய முடியாது. திமுக தலைவர்  கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்துவிட்டால் பிறகு நினைவிடம் கட்ட வேண்டுமென சொல்வார்கள்  என வாதிட்டார்.

"சட்ட சிக்கல் உள்ளதால் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது என அரசு கூறிவிட்டு, அதற்கு முரண்பாடான வாதத்தை அரசு முன்வைக்கிறது" என நீதிபதிகள்  கருத்து தெரிவித்தனர்.

மெரினாவில் கருணாநிதியை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க கோரிய வழக்கில் அனைத்து தரப்பு வாதமும் நிறைவுற்றது.

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்குமாறு ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story