தேசத்துரோக வழக்கில் கைதான திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப கோர்ட்டு மறுப்பு


தேசத்துரோக வழக்கில் கைதான திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப கோர்ட்டு மறுப்பு
x
தினத்தந்தி 10 Aug 2018 9:30 PM GMT (Updated: 10 Aug 2018 8:51 PM GMT)

தேசத்துரோக வழக்கில் கைதான திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப மறுத்த நீதிபதி, எந்த அடிப்படையில் அவர் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டது? என்று போலீசாரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

சென்னை,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டம் தொடர்பாகவும், சேலம்-சென்னை 8 வழிச்சாலை விவகாரம் தொடர்பாகவும் தமிழக அரசுக்கு எதிராக பேசியதாக கூறி மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது ஏற்கனவே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதற்கிடையே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கி சூடு குறித்து கடந்த ஜூன் மாதம் 25-ந் தேதி ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் திருமுருகன் காந்தி பேசி உள்ளார். இந்த வீடியோ யூ டியூப்பில் வெளியாகி உள்ளது.

இதைத்தொடர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார், திருமுருகன் காந்தி மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்தனர். இதையொட்டி அவர் தலைமறைவாக இருந்தார் என்று வெளியான தகவல் தவறு.

இந்தநிலையில் ஜெர்மனியில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் வந்த அவரை தமிழக போலீசார் பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்திய அவரை நேற்று சென்னை சைதாப்பேட்டை பெருநகர 11-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க மனு அளித்தனர்.

திருமுருகன் காந்தி தரப்பில் ஆஜரான வக்கீல் ஐ.பெரியசாமி, “திருமுருகன் காந்தி மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு குறித்தே அவர் பேசி உள்ளார். அவரது பேச்சில் தேசத்துரோகம் எதுவும் இல்லை. எனவே, அவரை சிறைக்கு அனுப்பக்கூடாது” என்று வாதாடினார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் திருமுருகன் காந்தி பேசியதாக கூறிய கருத்துகளை எழுத்து வடிவில் நீதிபதியிடம் கொடுத்தார். அதை வாசித்து பார்த்த நீதிபதி, “இதில் தேசத்துரோகம் எதுவும் இல்லையே? எந்த அடிப்படையில் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்துள்ளர்கள்?. ஐ.நா.வில் பேசியதற்கு இங்கு எப்படி வழக்கு போட முடியும்? எந்த அடிப்படையில் சிறையில் அடைக்க கோருகிறீர்கள்?” என்று போலீசாரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

இதன்பின்னர், திருமுருகன்காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட நீதிபதி மறுத்து விட்டார். இதைத்தொடர்ந்து, வழக்கு தொடர்பாக கைது செய்த நேரத்தில் இருந்து 24 மணி நேரம் விசாரணை நடத்தலாம் என்று சட்ட நடைமுறை இருப்பதால் திருமுருகன்காந்தியிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று போலீசார் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, திருமுருகன்காந்தியிடம் 24 மணி நேரம் மட்டும் போலீசார் விசாரணை நடத்தி விட்டு விடுவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து அவரை போலீசார், சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டிடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதன்பின்பு, தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயன்றதாக ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் திருமுருகன்காந்தி மீது ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கில் அவரை கைது செய்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் திருமுருகன் காந்தி கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், அவரை விடுவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story