அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் ‘திடீர்’ நீக்கம் புதிய பதிவாளராக ஜே.குமார் நியமனம்


அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் ‘திடீர்’ நீக்கம் புதிய பதிவாளராக ஜே.குமார் நியமனம்
x
தினத்தந்தி 10 Aug 2018 10:45 PM GMT (Updated: 10 Aug 2018 9:55 PM GMT)

சென்னை அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் திடீரென்று நீக்கப்பட்டுள்ளார். புதிய பதிவாளராக ஜெ.குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

சென்னை அண்ணா பல்கலைக்கழக பதிவாளராக பேராசிரியர் எஸ்.கணேசன் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறார்.

இந்தநிலையில் அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீடு ஊழல் புகாரில் பேராசிரியர் மற்றும் முன்னாள் தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி ஜி.வி.உமா மற்றும் திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் விஜயகுமார், உதவி பேராசிரியர் சிவகுமார் ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சுரப்பா எடுத்தார்.

இந்தநிலையில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்க கூட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது.

இதில் தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக பதிவாளர் கணேசனை நீக்க வேண்டும் என்றும், புதிய பதிவாளரை நியமிக்க வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழக வேந்தரும், தமிழக கவர்னருமான பன்வாரி லால் புரோகித்துக்கும், துணைவேந்தர் எம்.கே.சுரப்பாவுக்கும் கடிதம் எழுதப்பட்டது.

இதையொட்டி அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பதவியில் இருந்து பேராசிரியர் எஸ்.கணேசன் நீக்கப்பட்டார். அவர் பேராசிரியராக பணி புரிவார் என்று தெரிகிறது.

புதிய பதிவாளராக பேராசிரியர் ஜே.குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் திட்டமிடுதல் மற்றும் மேம்பாடு இயக்குனராக பணியாற்றி வந்தார்.

இதற்கான உத்தரவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சுரப்பா பிறப்பித்துள்ளார்.

Next Story