சென்னை அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை கி.வீரமணி வலியுறுத்தல்


சென்னை அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை கி.வீரமணி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Aug 2018 9:00 PM GMT (Updated: 11 Aug 2018 8:23 PM GMT)

சென்னை அண்ணா சாலையில், மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சிலை வைக்க வேண்டும் என்றும், அதற்காக முழு உருவ வெண்கல சிலை தயாராக உள்ளதாகவும் கி.வீரமணி கூறியுள்ளார்.

சென்னை,

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- 1968-ம் ஆண்டு அண்ணா முதல்-அமைச்சராக இருந்தபோதே கருணாநிதிக்கு சிலை வைக்க உள்ள தகுதிபற்றி இரு அறிக்கைகள் எழுதியதோடு, 1971-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந் தேதி, பெரியார் திடலில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில் பெரியார், தனது குருகுல மாணவரான கருணாநிதி செயற்கரிய சாதனை செய்தவர் என்பதால் சென்னை தலைநகரில் அவருக்கு சிலை வைக்கவேண்டும் என்று முழங்கினார்.

குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள் அருகே அமர்ந்து ஆமோதித்தனர். அதே மேடையில் கருணாநிதி சிலை அமைப்புக் குழுவையும் அறிவித்தார் பெரியார்.

முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியூர் பயணத்தில் இருந்தபோது, இடையில் அ.தி.மு.க.வினால் ஏற்பட்ட சட்டப்போராட்டத்தையும் திராவிடர் கழகம் எதிர்கொண்டு வென்று, அண்ணாசாலை ஜெனரல் பீட்டர்ஸ் சாலை சந்திப்பில் முறைப்படி அரசாணை பெற்று, 21-9-1975 அன்று பெரியதோர் திருவிழாவாக நடத்தினோம். பெரியார் மறைவுக்கு பிறகு திராவிடர் கழகத் தலைவராக பொறுப்பேற்ற மணியம்மையின் தலைமையில், குன்றக்குடி அடிகளார் சிலையினைத் திறந்து வைத்தார்.

அதன் பிறகு தமிழக முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நோயின் கொடுமையால் நம்மைவிட்டுப் பிரிந்த நிலையில், சென்னை நகரமெங்கும் நடந்த கலவரத்தில், சில விஷமிகள் திட்டமிட்டே கருணாநிதி சிலையை உடைத்தனர். அதன்பின் அதே இடத்தில் கருணாநிதியின் ஒரு புது சிலையை உருவாக்கி வைப்பதற்கான முயற்சிகளில் வேகமாக ஈடுபட்டபோது, அவரது குடும்பத்தினரில் சிலரும், தி.மு.க.வில் உள்ள சிலரும் தயக்கமும், மறுப்பும் தெரிவித்தனர்.

இதை மீறி வைக்கவேண்டாம் என்று எம்மிடம் கருணாநிதி உரிமை எடுத்துக்கொண்டு கூறினார். அதை ஏற்று அன்று முதல் நேற்றுவரை அமைதியாக இருந்தோம் எங்கள் கடமையைப் பின்னுக்குத் தள்ளி. நமது திராவிட இனத்தின் தீரமிக்க சுயமரியாதைக்காரரான நம் கருணாநிதியின் சிலையை அதே இடத்தில், சென்னை அண்ணா சாலையில் திறந்து வைக்க அனைவரும் ஒத்துழைப்புத் தரவேண்டு கிறோம்.

ஏற்கனவே தமிழக அரசும், சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பும் சிலைக்கு ஆதரவான நிலைப்பாட்டைத் தந்துள்ளன. இப்போது அவரது சிலை, அண்ணா சாலையில், பெரியார் சிலை, அண்ணா சிலை, கருணாநிதி சிலை, எம்.ஜி.ஆர். சிலை என்ற வரிசையில் அமைவது எல்லா வகையிலும் பொருத்தமாகவே அமையும் என்பதால், தமிழக அரசு உள்பட அனைவரது ஒத்துழைப்பும் கிடைக்கும் என்றும் பெரிதும் நம்பு கிறோம்.

எப்படியும் நம்மிடம் தயாராக இருக்கும் முழு உருவ வெண்கலச் சிலை திறப்பு விரைவில் உரிய காலத்தில் நடந்தே தீரும். இது ஒரு நன்றி காட்டும் நயத்தக்க பண்பாட்டின் அடையாளம். இந்தியாவே, ஏன் உலகமே திரண்டு இறுதி மரியாதை செலுத்திய ஒரு மாமனிதர் நம் இனமானத் தலைவரின் சிலை ஒரு வரலாற்று சின்னமாக, கம்பீரமாக மீண்டும் எழுந்து நிற்கும்; நிற்க வைப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story