ஸ்டெர்லைட் நிர்வாகப் பணிகளுக்கு பசுமை தீர்ப்பாயம் அனுமதி:முதல்-அமைச்சர் பழனிசாமி ஆலோசனை


ஸ்டெர்லைட் நிர்வாகப் பணிகளுக்கு பசுமை தீர்ப்பாயம் அனுமதி:முதல்-அமைச்சர் பழனிசாமி ஆலோசனை
x
தினத்தந்தி 12 Aug 2018 7:58 AM GMT (Updated: 2018-08-12T13:28:30+05:30)

ஸ்டெர்லைட் நிர்வாகப் பணிகளுக்கு பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்த நிலையில் தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. #edappadipalanisamy #sterlitecopper

சென்னை,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மே மாதம் நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டு அப்போது நடந்த தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு மே 28-ந்தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த மனு தேசிய பசுமை தீர்ப்பாய உறுப்பினர்களான நீதிபதிகள் ஆதர்ஷ்குமார் கோயல், டாக்டர் ஜவாத் ரகீம், எஸ்.பி.வங்டி, டாக்டர் நகின்நந்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், ராகேஷ் திவிவேதி உள்ளிட்டோரும், ஸ்டெர்லைட் தரப்பில் மூத்த வக்கீல் அரிமா சுந்தரம், பினாகி மிஸ்ரா ஆகியோரும் ஆஜரானார்கள். இந்த வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்க்க மனுதாக்கல் செய்துள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் ஆஜரானார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாயம், ஆலையில் நிர்வாக பணிகளை மட்டும் மேற்கொள்ள அனுமதி அளித்தது. மேலும் நிர்வாக ரீதியிலான பணிகளுக்காக ஆலைக்குள் ஊழியர்களை அனுமதிக்க வேண்டும், ஆலை இயங்காமல் இருப்பதை தூத்துக்குடி கலெக்டர் கண்காணிக்க வேண்டும். ஆலையில் அமில கசிவை கண்காணிக்க தனி அதிகாரியை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைக்க வேண்டும். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள குழுவுடன் இந்த அதிகாரியும் இணைந்து ஆலையால் ஏற்பட்ட மாசு தொடர்பான அறிவியல்பூர்வ ஆதாரங்களை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இதற்கு தமிழக அரசு தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொள்ளாத நீதிபதிகள், ஆலை எக்காரணம் கொண்டும் இயங்க அனுமதி கிடையாது. நிர்வாக பணிகள் மட்டும் மேற்கொள்ளலாம் என்று உத்தரவிட்டனர்.

மாசு தொடர்பான ஆதாரங்களை தாக்கல் செய்ய 10 நாள் அவகாசம் அளிக்கும்படி தமிழக அரசு சார்பில் கேட்கப்பட்டது. அந்த ஆதாரங்களை 20-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்ட தீர்ப்பாயம், வழக்கு விசாரணையை 20-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்தநிலையில், ஸ்டெர்லைட் நிர்வாகப் பணிகளுக்கு பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்த நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் பசுமைத்தீர்ப்பாயம் உத்தரவு மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. முதல்-அமைச்சர் பழனிசாமி தலைமையிலான கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தலைமைசெயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Next Story