பெருக்கெடுத்து ஓடும் காவிரியின் அழகை ரசிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்


பெருக்கெடுத்து ஓடும் காவிரியின் அழகை ரசிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
x
தினத்தந்தி 12 Aug 2018 9:30 PM GMT (Updated: 2018-08-13T02:21:49+05:30)

பெருக்கெடுத்து ஓடும் காவிரியின் அழகை ரசிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர். இதனிடையே கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

மேட்டூர்,

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பின. கே.ஆர்.எஸ். அணையும், கபினி அணையும் முழுகொள்ளளவை எட்டியதால் தமிழகத்துக்கு காவிரியில் உபரிநீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

நேற்று காலை நிலவரப்படி கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 80 ஆயிரம் கன அடியும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியும் என மொத்தம் வினாடிக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை கபினி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 40 ஆயிரம் அடியாக குறைக்கப்பட்டது. இதனால் இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு வினாடிக்கு 90 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல்லை கடந்து சேலம் மாவட்டம் மேட்டூரை வந்தடைந்தது. இதனால் கடந்த மாதம் 23-ந் தேதி மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. 5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை நிரம்பியது. இதையடுத்து அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கன அடிக்கும் மேல் தண்ணீர் திறக்கப்பட்டது.

அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் அளவை விட அணைக்கு வந்த நீரின் அளவு குறைந்தது. இதனால் அணை நீர்மட்டம் 116 அடியாக குறைந்தது. இந்நிலையில் கர்நாடகத்தில் பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்து அங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீர் அதிக அளவு திறக்கப்பட்டதால் மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் மதியம் முழு கொள்ளளவை எட்டியது. நேற்று காலை அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. இரவில் வினாடிக்கு 1 லட்சத்து 15 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. இதையடுத்து கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் 2-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியதால் உபரிநீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனை பார்க்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மேட்டூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். அணை இடதுகரை, வலதுகரை கால்வாய், உபரிநீரை வெளியேற்றும் பாதையில் அமைக்கப்பட்ட புதிய பாலம், மேட்டூர் அனல்மின் நிலைய பாலம், பூங்கா ஆகிய பகுதிகளில் மக்கள் கூட்டமாக காட்சி அளிக்கிறது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதிகளில் காவிரி கரையோரத்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வீடுகளை மூழ்கடித்தப்படி வெள்ளம் செல்கிறது. அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் முக்கொம்பு மேலணைக்கு வினாடிக்கு 90 ஆயிரம் கன அடியாக வந்து சேர்ந்தது. முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியும், கொள்ளிடத்தில் வினாடிக்கு 60 ஆயிரம் கன அடியுமாக பிரித்து திறக்கப்பட்டது. இதனால் திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் இருகரைகளையும் தொட்டபடி செல்கிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. வெளிநாட்டினர் உள்பட ஏராளமான சுற்றுலா பயணிகள் பெருக்கெடுத்து ஓடும் காவிரியின் அழகை ரசித்தனர்.

காவிரியின் அழகை ரசித்து கொண்டிருந்த இத்தாலி நாட்டை சேர்ந்த ஒரு தம்பதியினர் மற்றும் அவர்களது இரு பெண் குழந்தைகள் ஒரு புரோகிதர் முன் அமர்ந்து காவிரி தாய்க்கு சிறப்பு பூஜை நடத்தினர். புரோகிதர் கூறிய மந்திர சொற்களை அவர்களும் திரும்ப சொல்லி மலர்களை தூவினார்கள். தங்களது குழந்தைகளின் கல்வி சிறப்பாக அமைய சிறப்பு பூஜை நடத்தியதாக அவர்கள் குறிப்பிட் டனர்.

காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கரையோர மாவட்டங்களான தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய 11 மாவட்ட கலெக்டர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஒலிபெருக்கிகள் மற்றும் தண்டோரா மூலம் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகிறது. சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் 359 பேர் 4 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆற்றின் குறுக்கே செல்லும் தரைமட்ட பாலங்களில் எச்சரிக்கை பதாகைகள் அமைத்து போக்குவரத்தை தடை செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) கனமழை பெய்யக்கூடும் என்றும், வட ஆந்திர கடலோர பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக 24 மணிநேரம் செயல்படும் 1077, 1070 ஆகிய அவசர தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story