மாநில செய்திகள்

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை தாண்டாமல் நிர்வகிப்போம்பினராயி விஜயனுக்கு, எடப்பாடி பழனிசாமி பதில் + "||" + To Pinarayi Vijayan, Edappadi Palaniasamy answered

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை தாண்டாமல் நிர்வகிப்போம்பினராயி விஜயனுக்கு, எடப்பாடி பழனிசாமி பதில்

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை தாண்டாமல் நிர்வகிப்போம்பினராயி விஜயனுக்கு, எடப்பாடி பழனிசாமி பதில்
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை தாண்டாமல் நிர்வகித்து வருவதாக கேரள முதல்-மந்திரிக்கு, தமிழக முதல்-அமைச்சர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
சென்னை,

கேரளா மாநிலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 139 அடியாக குறைக்கவேண்டும் என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இதற்கு பதில் அளித்து பினராயி விஜயனுக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

பாதுகாப்பாக உள்ளது

சுப்ரீம் கோர்ட்டு 7-5-2014 அன்று அளித்த உத்தரவின்படி, நீர்சேமித்து வைத்தல், நில அதிர்வு மற்றும் கட்டிட பாதுகாப்பு உள்பட பல்வேறு அம்சங்களில் முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக இருக்கிறது என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த காலங்களில் இந்த அணையை ஏராளமான நிபுணர்கள் பல்வேறு தருணங்களில் ஆய்வு செய்து, அணை பாதுகாப்பாக இருக்கிறது என்பதை உறுதி செய்திருக்கிறார்கள்.

சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வை குழுவை அமைத்திருந்ததை நீங்கள் அறிவீர்கள். இந்த குழு சீரான இடைவெளியில் அணையை ஆய்வு செய்துவருகிறது. அந்த வகையில் கடந்த 4-ந்தேதியும் மேற்பார்வை குழு ஆய்வு மேற்கொண்டது. அதில், 142 அடி அளவுக்கு தண்ணீரை சேமித்துவைப்பதற்கு அணை பாதுகாப்பானது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அணைக்கு எந்த விதத்திலும் அச்சுறுத்தல் இல்லை. எனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அனுமதிக்கப்பட்ட 142 அடி அளவுக்கு தண்ணீரை சேமித்துவைக்கலாம்.

142 அடியை தாண்டாமல்...

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து அதிகபட்ச அளவு தண்ணீரை தமிழக அரசு வைகை ஆற்று படுகைக்கு அனுப்பிவருகிறது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரிக்க தொடங்கியதும், தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களை சேர்ந்த என்ஜினீயர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் ஒருங்கிணைந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அணையின் மதகுகள் வழியாக திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவை தமிழ்நாடு நீர்வள ஆதாரத்துறை பராமரித்து வருகிறது.

இதனால் அனுமதிக்கப்பட்ட 142 அடியை தாண்டாமல் அணையின் நீர்மட்டத்தை நிர்வகித்து வருகிறோம். முல்லைப்பெரியாறு துணைக்குழு தலைவர் நேற்று முன்தினம் (15-ந்தேதி) அணையை ஆய்வு செய்தார். அப்போது, டிஜிட்டல் முறையில் தண்ணீர் அளவை பதிவு செய்யும் கருவி நல்லமுறையில் செயல்படுவதை கண்டறிந்தார். இதுதவிர அணையின் நீர்மட்டத்தை அளவிடும் வகையில் ஏராளமான அளவுமானிகளும் பொருத்தப்பட்டுள்ளன.

அனுமதிப்பது இல்லை

தமிழக அதிகாரிகளை முல்லைப்பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவை அளவிடுவதற்கு கேரளா அனுமதிப்பதில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன். இதனால் அணையின் நீர்மட்டத்தை வைத்தே எவ்வளவு தண்ணீர் வருகிறது என்பதை கணக்கிடும் கட்டாயத்தில் தமிழக அதிகாரிகள் உள்ளனர். எனவே நீங்கள் உங்கள் அதிகாரிகளை முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பதிவாகும் மழை அளவு தொடர்பான விவரங்களை தமிழக அதிகாரிகளோடு பகிர்ந்துகொள்ள அறிவுறுத்த வேண்டும்.

முல்லைப்பெரியாறு அணை மற்றும் அதனை சார்ந்த கட்டுமானங்களுக்கான மின்சார வினியோகத்தை சீரமைப்பது தொடர்பான விவகாரத்தை உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். தமிழகம் மற்றும் கேரளா முடிவெடுத்ததுபோன்று மின்சார வினியோகத்தை சீரமைக்க ரூ.1.65 கோடி தொகையை கேரள மாநில மின்சார வாரியத்துக்கு தமிழ்நாடு ‘டெபாசிட்’ செய்துள்ளது.

மின்சார வினியோகம்

தமிழக அரசு அணையின் மின்சார வினியோகத்தை சீரமைப்பது தொடர்பாக கேரள அரசு மற்றும் அம்மாநில மின்சார வாரியத்தோடு தொடர்ச்சியாக தொடர்பில் இருந்துவருகிறது. ஆனாலும் மின்சார வினியோகம் இன்னும் சீரமைக்கப்படவில்லை.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நீங்கள் அறிவுறுத்தி, அணை மற்றும் அதனை சார்ந்த கட்டுமானங்களுக்கு உடனடியாக மின்சார வினியோகம் செய்வதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும். தமிழக நீர்வள ஆதாரத்துறை முல்லைப்பெரியாறு அணைக்கு வரும் தண்ணீரை நிர்வகித்து, ஒழுங்குபடுத்தி அதற்கு ஏற்ப வெளியேற்றி வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.