கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை கல்வித்துறை அதிரடி நடவடிக்கை


கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை கல்வித்துறை அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 19 Aug 2018 10:45 PM GMT (Updated: 19 Aug 2018 10:36 PM GMT)

தமிழக கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவை தமிழக கல்வித்துறை அதிரடியாக பிறப்பித்து உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் பள்ளிகளில் செல்போன் பயன்படுத்துவதற்கு ஏற்கனவே தடை உத்தரவு அமலில் உள்ளது. கல்லூரிகளை பொருத்தவரையில் மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடாக செல்போன் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

செல்போன்களால் மாணவ- மாணவிகளின் கவனம் சிதறுவதை தடுக்க கல்லூரி கல்வித்துறை இயக்குனரகம் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது.

இதற்கான உத்தரவை கல்லூரி கல்வி இயக்குனர் சாருமதி அனைத்து மண்டல கல்வித்துறை இணை இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அவர்கள் தங்களது எல்லைக்குள் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கும் இந்த சுற்றறிக்கையை அனுப்ப வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளார்.
அவரது சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கல்லூரி வளாகத்திற்குள் மாணவ-மாணவிகள் செல்போன் உபயோகிப்பதை தடை செய்யுமாறு முதல்வர்கள் மற்றும் செயலாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பேச தடைவிதிக்கப்பட்டதை வரவேற்கிறேன். கல்லூரிகளில் கண்டிப்பாக செல்போனை தடை செய்யவேண்டும். ஏனென்றால் வகுப்பு நேரத்தில் மாணவ-மாணவிகள் செல்போனில் பேசுவதும், வீடியோ எடுப்பதும் சகஜமாக உள்ளது. எனவே படிப்பு பாழ்பட்டுப்போகிறது. மாணவ-மாணவிகள் செல்போனை கல்லூரிகளுக்கு கொண்டு வரலாம். ஆனால் வகுப்பு நேரத்தில் சுவிட்ச் ஆப் செய்து விடவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story