விநாயகர் சதுர்த்திக்கு விதித்த நிபந்தனைகளை எதிர்த்து வழக்கு பதில் அளிக்க அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
விநாயகர் சதுர்த்திக்கு விதித்த நிபந்தனைகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சென்னை,
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலைகள் வைத்து வழிபாடு நடத்தவும், ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு நிபந்தனைகளை விதித்து கடந்த மாதம் 9-ந்தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
அதன்படி சிலைகள் வைக்கப்படும் இடத்தின் உரிமையாளர்கள், உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறையினர், மாசு கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்புத்துறையினர், மின்சாரவாரியம், போலீஸ் அதிகாரிகளிடம் தடையில்லா சான்று பெறவேண்டும். அதுமட்டுமல்ல, 5 நாட்களுக்கு மேல் சிலைகளை வைத்திருக்கவும் கூடாது என்று அரசு கூறியிருந்தது.
எதிர்த்து வழக்கு
இந்த அரசாணையை ரத்து செய்வதோடு, அதற்கு தடை விதிக்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், இந்து முன்னணி அமைப்பின் நிறுவன அமைப்பாளரும், விநாயகர் சதுர்த்தி மத்திய குழு தலைவருமான ராம கோபாலன் உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.
பதில் அளிக்க உத்தரவு
இந்த வழக்குகள் எல்லாம் நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘விநாயகர் சிலை வைக்கப்படும் பந்தலுக்கு எப்படி மின் இணைப்பு வழங்கப்படுகிறது?’ என்று கேள்வி எழுப்பினார்.
பின்னர், இந்த வழக்கை வருகிற 4-ந்தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதற்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story