“எனது குடும்பத்தினர் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை” சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை அறிக்கை


“எனது குடும்பத்தினர் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை” சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை அறிக்கை
x
தினத்தந்தி 1 Sep 2018 10:36 PM GMT (Updated: 2018-09-02T04:06:13+05:30)

“எனது குடும்பத்தினர் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை” என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை கூறியுள்ளார்.

திருச்சி,

சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரின் தந்தையும், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை சேர்ந்தவருமான இரா.சின்னத்தம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ந் தேதி எனது வீட்டில் நடந்த வருமானவரி சோதனை பற்றிய சில செய்திகள் அரசியல் எதிரிகளால் திட்டமிட்டு திரித்து பரப்பப்பட்டது.

இந்த வருமானவரி சோதனையின்போது கணக்கில் வராத பணம் வருமானவரித்துறையினரால் கைப்பற்றப்படவில்லை. இந்த சோதனையை தொடர்ந்து, நானும், எனது உறவினர்களும் வருமானவரித் துறையினருக்கு முழு ஒத்துழைப்பை அளித்து வருகிறோம்.

எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் வருமானவரித்துறையினர் கடிதம் அனுப்பி நேரில் விசாரணைக்கு வருமாறு அழைத்தபோதெல்லாம் வருமானவரித்துறையினரால் எழுப்பப்பட்ட அனைத்து கேள்விகள் குறித்து அந்த துறையினருக்கு உரிய விபரங்களை அளித்துள்ளோம். ஆனால் ஊடகங்களில் வெளிவருவதுபோல் எந்தவித வாக்குமூலமும் அளிக்கப்படவில்லை.

எனது குடும்பம் சட்டப்படி செலுத்த வேண்டிய வருமான வரியினை தொடர்ந்து முறையாக செலுத்தி வருகிறது. என் மீதும், எனது குடும்பத்தினர் மீதும் உண்மைக்கு புறம்பாக தவறான தகவல்களை பரப்பி வருவது மிகுந்த மனஉளைச்சலையும், மனவேதனையும் அளிக்கிறது. நானோ, எனது குடும்பத்தினரோ எந்தவிதமான முறைகேட்டிலும் ஈடுபடவில்லை.

வருமானவரித்துறை சோதனை குறித்து எனது குடும்பத்தினர் சட்டரீதியாக எதிர்கொண்டு வரும் நிலையில், அரசியல் எதிரிகளால் திட்டமிட்டு உருவாக்கி வரும் சூழ்ச்சிகளை நானும், எனது குடும்பத்தினரும் அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வோம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Next Story