வெளிநாட்டு நோயாளிகளுக்கு உறுப்பு வழங்க ரூ.12 கோடி லஞ்சம் அன்புமணி ராமதாஸ் திடுக்கிடும் தகவல்


வெளிநாட்டு நோயாளிகளுக்கு உறுப்பு வழங்க ரூ.12 கோடி லஞ்சம் அன்புமணி ராமதாஸ் திடுக்கிடும் தகவல்
x
தினத்தந்தி 3 Sep 2018 10:53 AM GMT (Updated: 2018-09-03T16:23:30+05:30)

வெளிநாட்டு நோயாளிகளுக்கு உறுப்பு வழங்க ரூ.12 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக இதற்கு சிபிஐ விசாரணை தேவை என அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.

சென்னை

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் நடைபெறும் உடல் உறுப்புதான ஊழல்கள் குறித்து மீண்டும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த நோயாளிகள் பலர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில், சேலம் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரிடமிருந்து கட்டாயமாகப் பெறப்பட்ட உடல் உறுப்புகள் வெளிநாட்டு நோயாளிளுக்கு வழங்கப்பட்டதில் விதிமீறல்கள் நடந்தது விசாரணையில் உறுதியாகியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கடந்த மே 18-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் சாலைவிபத்தில் சிக்கி காயமடைந்தார். சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அடுத்த இரு நாட்களில் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகளை கொடையாக வழங்கலாம் என மருத்துவமனை நிர்வாகம் ஆலோசனை வழங்கிய போதிலும் அதை ஏற்க உறவினர்கள் மறுத்துவிட்டனர்.

 மொத்தம் 3 முறை மருத்துவமனை நிர்வாகம் கோரியும் உடல் உறுப்புகளை கொடையாக வழங்க குடும்பத்தினர் மறுத்துவிட்ட நிலையில், நான்காவது முறை கட்டாயமாக ஒப்புதல் பெறப்பட்டு அவரது உறுப்புகள் சென்னையிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதுபற்றி மணிகண்டன் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழக முதலமைச்சருக்கு கேரள முதல்வர் கடிதம் எழுதினார். அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில் தான் பல உண்மைகள் வெளிவந்துள்ளன.

மணிகண்டனிடமிருந்து பெறப்பட்ட இதயமும், நுரையீரலும் விதிகளை மீறி வெளிநாட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நோயாளிக்காக பெறப்பட்ட இதயம் சட்டவிரோதமாக லெபனான் நாட்டு நோயாளிக்கு பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்ட நுரையீரல் அங்கு காத்திருப்புப் பட்டியலில் இருந்த 5 உள்ளூர் நோயாளிகளுக்கு வழங்கப்படாமல் இஸ்ரேல் நாட்டு நோயாளிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு உறுப்பு
பொறுத்தப்பட்ட நோயாளிகளும் இறந்து விட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேபோல், உள்ளூர் நோயாளி ஒருவருக்கு பெறப்பட்ட சிறுநீரகமும் இன்னொருவருக்கு வழங்கப்பட்டது உறுதியாகியுள்ளது.

உள்ளூர் நோயாளிக்கு பொருத்தப்பட வேண்டிய உறுப்பு அதற்கான அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஊரில் இல்லாததால் வெளிநாட்டு நோயாளிக்கு பொருத்தப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், குறிப்பிட்ட நாளில் தலைமை மருத்துவர் ஊரில் இருந்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றொரு நிகழ்வில் தமிழக அரசின் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரி ஒருவர் உறுப்பு மாற்று ஆணையத்தின் அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஒரு குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைக்கு ஒரு குறிப்பிட்ட உறுப்பை வழங்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். 

ஆட்சியாளர்கள் மற்றும் உயரதிகாரிகளின் துணையுடன் இந்த முறைகேடுகள் நடந்துள்ள நிலையில், உடலுறுப்பு மாற்று ஆணையத்திற்கு அயல் பணியில் வந்த இரு பணியாளர்கள் தான் இவை அனைத்துக்கும் காரணம் என்றும், அவர்கள் இருவரும் தாங்களாகவே பதவி விலகி விட்டனர் என்றும் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் குற்றவாளிகள் அனைவரும் தப்பிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் உடல் உறுப்பு மாற்று சந்தையாக தமிழகம் மாறியுள்ளது. மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகளை கொடையாக பெற்று உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு பொறுத்தி அவர்களின் உயிரைக் காப்பது புனிதமான செயலாக கருதப்படுகிறது. ஆனால், அந்த உறுப்புகளை உள்ளூர் ஏழை நோயாளிகளுக்கு வழங்காமல் வெளிநாட்டு நோயாளிகளுக்கு பணத்தை வாங்கிக் கொண்டு பொருத்துவதன் மூலம் புனிதமான செயலை சில மருத்துவமனைகளும், மருத்துவர்களும் வணிகமாக்கியுள்ளனர். இதற்கு
அரசு உயரதிகாரிகள் சிலரும் துணை போயுள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் வெளிநாடுகளைச் சேர்ந்த 95 பேருக்கு 127 உறுப்புகள் விதிகளை மீறி பொருத்தப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பாக எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை; எந்த மருத்துவமனை மீதும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சென்னை அடையாறு, பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள இரு தனியார் மருத்துவமனைகளில் தான் இத்தகைய முறைகேடுகள் அதிக அளவில் நடப்பதாகவும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக வெளிநாட்டு பயணிகளிடமிருந்து சராசரியாக ரூ.12 கோடி வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. 

உடல் உறுப்புதான ஊழலில் தமிழக அரசின் உயர்பதவிகளில் உள்ள அதிகாரிகள் சிலருக்கும், அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. ஆனால், இந்தக் குற்றச்சாற்றுகள் பற்றி தமிழக அரசின் விசாரணைக்குழு எந்த விசாரணையும் நடத்தியதாக தெரியவில்லை. உடல் உறுப்பு தான ஊழல் குறித்து கடந்த சில மாதங்களாக நான் தொடர்ந்து குற்றச்சாற்றுகளைக் கூறி
வருகிறேன். இதனால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுப்பதைத் தடுக்கும் நோக்குடன் தான் தமிழக அரசு மேலோட்டமாக விசாரணை நடத்தி, அயல்பணியில் வந்த பணியாளர்கள் மீது பழியைப் போட்டு, முக்கிய அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் காப்பாற்றியுள்ளது. 

உறுப்பு தான ஊழலின் பின்னணியில் மிகப்பெரிய சதி உள்ளது. இதன் பின்னணியில் பல பெரிய மனிதர்கள் இருப்பதாலும், கோடிக்கணக்கில் பணம் பரிமாறப்பட்டிருப்பதாலும் இது குறித்த உண்மைகளை மத்தியப் புலனாய்வுப் பிரிவு, அமலாக்கப்பிரிவு ஆகிய அமைப்புகளின் விசாரணையால் தான் வெளிக்கொண்டு வர முடியும். தமிழ்நாட்டில் நடைபெறும் உடல் உறுப்பு தான ஊழல்கள் என்பது ஊடகங்களில் வெளியாகியுள்ளதைப் போன்று சாதாரணமான ஒன்றல்ல. ஒவ்வொரு ஆண்டும் பலநூறு கோடி ரூபாய் அளவுக்கு இதில் ஊழல் நடைபெறுகிறது. அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை பலரும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

உலகில் யாருக்கு உடல் உறுப்பு தேவைப்பட்டாலும் பணத்தை மூட்டைக் கட்டிக் கொண்டு தமிழகத்திற்கு வந்தால் சாதித்து விடலாம் என்ற அவப்பெயர் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ளது. இதைத் தடுத்து நிறுத்தி, இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தண்டிக்க வேண்டியது அவசியம் ஆகும். ஆனால், தமிழ்நாட்டு காவல்துறையால் இது சாத்தியமில்லை என்பதால் இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.
இதுகுறித்து தமிழக ஆளுனரிடமும், சி.பி.ஐ. இயக்குனரிடமும் விரிவான புகார் மனுவை அளிக்க உள்ளேன். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்


Next Story