மாநில செய்திகள்

சுங்குவார்சத்திரம் அருகேரூ.1 கோடி கார் உதிரிபாகங்களுடன் கன்டெய்னர் லாரி கடத்தல்8 பேர் கைது; லாரி மீட்பு + "||" + Container truck trafficking with car parts of Rs. 1 crore 8 arrested Truck rescue

சுங்குவார்சத்திரம் அருகேரூ.1 கோடி கார் உதிரிபாகங்களுடன் கன்டெய்னர் லாரி கடத்தல்8 பேர் கைது; லாரி மீட்பு

சுங்குவார்சத்திரம் அருகேரூ.1 கோடி கார் உதிரிபாகங்களுடன் கன்டெய்னர் லாரி கடத்தல்8 பேர் கைது; லாரி மீட்பு
ரூ.1 கோடி மதிப்புள்ள கார் உதிரிபாகங்களுடன் கன்டெய்னர் லாரியை மர்மநபர்கள் கடத்திச் சென்றனர். போலீசார் 8 பேரை கைது செய்து லாரியையும் மீட்டனர்.
வாலாஜாபாத், 

பெங்களூருவில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கில் இருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய சென்னை துறைமுகத்துக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள கார் உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. லாரியை திருநெல்வேலியை சேர்ந்த அருள்மணி (வயது 52) என்பவர் ஓட்டிவந்தார்.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே உள்ள பிள்ளைசத்திரம் என்ற இடத்தில் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் அருள்மணி சாப்பிட இறங்கினார். அப்போது கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்த 8 பேர் அருள்மணியை காரில் ஏற்றிக்கொண்டு, கன்டெய்னர் லாரியை கடத்திச் சென்றனர்.

குன்றத்தூர் அருகே சென்றதும் அருள்மணியை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு மர்மநபர்கள் தப்பிச் சென்றனர். இதுபற்றி சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் அருள்மணி புகார் செய்தார்.

காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமனி உத்தரவின் பேரில் சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணா மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் கன்டெய்னர் லாரியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அந்த கன்டெய்னர் லாரியில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டிருந்ததால் அதன்மூலம் லாரி ஆந்திராவை நோக்கி செல்வது தெரிந்தது. உடனே போலீசார் விரைந்து சென்று அந்த லாரியை மடக்கிப்பிடித்து சோதனை செய்ததில், கடத்தப்பட்ட கன்டெய்னர் லாரியின் ஜி.பி.எஸ். கருவியை கழற்றி இந்த லாரியில் கடத்தல்காரர்கள் வீசிச்சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து தனிப்படை போலீசார் சுங்கச்சாவடிகளில் விசாரணை நடத்தியதில், செங்குன்றம்-பெரியபாளையம் சாலையில் உள்ள ஒரு குடோனில் கன்டெய்னர் லாரி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது கன்டெய்னர் லாரியில் இருந்த உதிரிபாகங்களை இறக்கிவைத்துவிட்டு, லாரிக்கு வேறு பதிவு எண் மாற்றப்பட்டு, புதிய வண்ணம் அடிக்கும் பணி நடந்துகொண்டிருந்தது. இதைத்தொடர்ந்து கன்டெய்னர் லாரி மற்றும் உதிரிபாகங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். குடோனில் பதுங்கியிருந்த கடத்தல் கும்பலை சேர்ந்த மாதவரம் சம்சுதீன் (28), வில்லிவாக்கம் முகேஷ் (30), அலாவுதீன் (42), திருவேற்காடு தாவூத்பாட்ஷா (32), திருவொற்றியூர் சதீஷ்குமார் (22), செய்யாறு சிவக்குமார் (34), ஆர்.கே.நகர் சிவா (25), மேலும் ஒருவர் என 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் அனைவரும் லாரி டிரைவர்கள் என்றும், பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வரும் உயர்ரக மருந்து பொருட்களை கடத்த திட்டமிட்டதாகவும், தவறுதலாக இந்த கன்டெய்னர் லாரியை கடத்திவிட்டதாகவும் தெரிவித்தனர். அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு கார், 3 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 8 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.