சிலை கடத்தல் வழக்குகளில் சி.பி.ஐ. நிலைப்பாடு என்ன? அதிகாரிகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


சிலை கடத்தல் வழக்குகளில் சி.பி.ஐ. நிலைப்பாடு என்ன? அதிகாரிகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 11 Sep 2018 11:27 PM GMT (Updated: 11 Sep 2018 11:27 PM GMT)

சிலை கடத்தல் வழக்குகளில் சி.பி.ஐ. நிலைப்பாடு என்ன? என்பது குறித்து அதிகாரிகள் பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவை அமைத்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த நிலையில், சிலை கடத்தல் விவகாரத்தில் சர்வதேச தொடர்புகள் குறித்து விசாரிக்க வேண்டியது இருப்பதால், சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் சி.பி.ஐ.க்கு மாற்றப்படுவதாக தமிழக அரசு கடந்த மாதம் 1-ந் தேதி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து வக்கீல் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தது.

இந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.எச்.அரவிந்த்பாண்டியன், ‘சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு தமிழக அரசு மாற்றியது தொடர்பான ஆவணங்களை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளோம்’ என்றார்.

சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வக்கீல் சீனிவாசன், ‘தமிழக அரசு பிறப்பித்த அரசாணை சி.பி.ஐ. இயக்குனர் அலுவலகத்தில் பரிசீலனையில் இருந்து வருகிறது’ என்றார்.

அப்போது நீதிபதிகள், ‘ஒரு வேளை இந்த வழக்குகளை விசாரிக்க சி.பி.ஐ. மறுத்தால் என்ன செய்வீர்கள்?’ என்று அரசு தரப்பு வக்கீலிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல், ‘இந்த வழக்கை விசாரிக்க மாட்டோம் என்று சி.பி.ஐ. கூறவில்லை. எப்.ஐ.ஆர். உள்ளிட்ட ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு தான் கடிதம் அனுப்பி உள்ளது. அந்த கடிதம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் கோர்ட்டில் தாக்கல் செய்கிறேன்’ என்றார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பாக தங்களின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 24-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story