புழல் சிறையை உல்லாச விடுதியாக மாற்றிய கைதிகள் புகைப்படங்கள் வெளியானதால் பரபரப்பு


புழல் சிறையை உல்லாச விடுதியாக மாற்றிய கைதிகள் புகைப்படங்கள் வெளியானதால் பரபரப்பு
x
தினத்தந்தி 13 Sep 2018 10:15 PM GMT (Updated: 13 Sep 2018 10:09 PM GMT)

புழல் சிறையை உல்லாச விடுதியாக மாற்றிய கைதிகள் புகைப்படங்கள் வெளியானதால் பரபரப்பு

செங்குன்றம், 

புழல் சிறையில் சொகுசு வசதியுடன் கூடிய படுக்கை அறைகள், செல்போன், விதவிதமான உணவு என உல்லாச விடுதியாக மாற்றிய கைதிகளின் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் திருந்தவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதே பல கட்டுப்பாடுகள் நிறைந்த சிறை வாழ்க்கை. ஆனால் இப்போது புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கையை அனுபவித்துவரும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புழல் சிறையில் தண்டனை கைதிகளுக்கான சிறை, விசாரணை கைதிகளுக்கான சிறை, பெண்கள் சிறை என உள்ளன. தற்போது தண்டனை கைதிகளுக்கான சிறையில் 750-க்கும் மேற்பட்டோரும், விசாரணை கைதி சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், பெண்கள் சிறையில் 150-க்கும் மேற்பட்ட பெண் கைதிகளும் அடைக்கப்பட்டு உள்ளனர்.

கஞ்சா, செல்போன் பறிமுதல்

புழல் சிறையில் உள்ள கைதிகளுக்கு செல்போன், கஞ்சா உள்ளிட்டவை கிடைக்க உடந்தையாக இருந்த சிறை காவலர்கள் கைது செய்யப்படுவதும் வாடிக்கையாக உள்ளது.

கைதிகள் ஜாமீனில் வெளியில் செல்வதற்கு ரூ.25 ஆயிரம் வரை அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாகவும் கைதிகளின் உறவினர்கள் புகார் கூறி வருகிறார்கள். கஞ்சா, செல்போன்களை கைதிகளிடம் கொண்டுசேர்ப்பதற்கும் பல்லாயிரக்கணக்கில் பணம் புழங்கிவருவதாக கூறப்படுகிறது.

இதுபற்றி அறிந்த மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து, சிறையில் நடைபெறும் முறைகேடுகள் பற்றி விளக்கம் கேட்டு சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள சிறைகளில் சோதனை நடத்தப்பட்டு கைதிகளிடம் இருந்து செல்போன், கஞ்சா, கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சொகுசு வாழ்க்கை

தற்போது தண்டனை கைதிகளுக்கான சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த கைதி ஒருவரும், மதுரை கைதிகள் இருவரும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவரும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இவர்கள் 3 பேரும் சிறைக்குள் விலை உயர்ந்த செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.

வண்ணமயமான திரைச் சீலைகள் தொங்கவிடப்பட்டு சொகுசு வசதியுடன் கூடிய படுக்கை அறைகள், அதில் மெத்தை, தலையணைகளுடன் கூடிய கட்டில்கள் என உல்லாச விடுதியாகவே சிறையை மாற்றி உள்ளனர். கைதிகளுக்கான ஆடையை அணியாமல் இவர்கள் சுற்றுலா செல்வதுபோல பல வண்ண நாகரிக உடைகளை அணிந்தும், காலில் ஷூ அணிந்தும் சிறைக்குள் வலம் வருகின்றனர்.

கருப்புநிற கண்ணாடி அணிந்து புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தும், செல்பி எடுத்தும் உற்சாகமாக இருப்பது இந்த புகைப்படங்கள் மூலமாக தெரியவந்துள்ளது. இந்த புகைப்படங்களில் சிறை வளாகத்தில் உள்ள தோட்டத்தில் கைதி ஒருவர் உற்சாகமாக அமர்ந்து போஸ் கொடுக்கிறார். இன்னொரு கைதி ஜாலியாக நடந்துசெல்கிறார். மற்றொரு கைதி ஜிப்பா அணிந்தபடி 2 கைகளையும் நீட்டி போஸ் கொடுக்கிறார்.

விதவிதமான உணவுகள்

‘ஹாட்பாக்ஸ்’களில் வெளியில் இருந்து வரவழைக்கப்பட்ட வடை, தோசை என விதவிதமான சூடான உணவுகள் அறையில் வைக்கப்பட்டுள்ளன. சிறை அதிகாரிகள் துணையோடு பிரபல ஓட்டல்களில் இருந்து சுவையான உணவுகள் வாங்கி அருந்துவது தெரிகிறது.

சிறையில் உள்ள முக்கிய குற்றவாளிகள், சர்வதேச குற்றங்கள் புரிந்த கைதிகள் சிலர் தங்களது செல்போன்களை பயன்படுத்தி வெளிநாட்டு கடத்தல் கும்பலுடனும், தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்களுடனும் தொடர்பில் இருக்கலாம் எனவும் சந்தேகங்கள் எழுந்துள்ளது.

உடனடியாக தண்டனை

புழல் சிறையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கைதியிடம் செல்போன், கஞ்சா ஆகியவற்றை கைப்பற்றுவது அரிதானதாக இருந்தது. அப்படியே செல்போன்கள் சிக்கினால், அவை பறிமுதல் செய்யப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டு அந்த கைதி யாரிடம் பேசினார்? என்று ஆராய்ந்து உடனடியாக தண்டனை கொடுக்கப்பட்டது.

ஆனால் தற்போது ஒருசில மாதங்களில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட செல்போன்களும், 20-க்கும் மேற்பட்ட கைதிகளிடம் கஞ்சாவும் பறிமுதல் செய்யும் நிலை உள்ளது. கைதிகளுக்கு இவை எப்படி கிடைக்கின்றன? என எந்த சிறை அதிகாரியும் ஆராய்ந்து பார்ப்பது கிடையாது. பிடிக்கும்போது மட்டும் புழல் போலீசில் புகாரை கொடுத்துவிட்டு அப்படியே விட்டுவிடுகிறார்கள்.

இதனால் செல்போன்களையும், கஞ்சாவையும் சிறை அதிகாரிகளே கைதிகளுக்கு கொடுத்து வருகிறார்கள் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். புழல் சிறையில் மட்டும் இதுவரை 2 பயங்கர கொலைகள் நடந்துள்ளன. கைதிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் தொடர்ந்தவண்ணம் உள்ளது. இந்த சூழ்நிலையில், கைதிகளின் சொகுசு வாழ்க்கை பற்றிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

நடவடிக்கை எடுக்கப்படும்

இந்தநிலையில் சிறைத்துறை தலைவர் அசுதோஷ் சுக்லா, டி.ஐ.ஜி.கனகராஜ் ஆகியோர் நேற்று தண்டனை கைதிகள் சிறையில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதுகுறித்து அசுதோஷ் சுக்லா கூறும்போது, “தற்போது வெளியாகி உள்ள புகைப்படங்கள் ஒரு மாதத்துக்கு முன்பாக எடுக்கப்பட்டவை. இந்த புகைப்படங்களை வெளியிட்டது யார்? என்பது குறித்து விசாரித்து வருகிறோம். கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வது குறித்தும் விசாரணை நடத்திவருகிறோம். இதுதொடர்பாக ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Next Story