கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோட் உத்தரவு


கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோட் உத்தரவு
x
தினத்தந்தி 20 Sep 2018 7:40 AM GMT (Updated: 20 Sep 2018 7:46 AM GMT)

கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. #ChennaiHighCourt

சென்னை

சென்னை கொரட்டூரைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘மோட்டார் வாகன சட்டப்படி நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று விதி உள்ளது. இந்த விதியை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. இந்த விதியை அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு சம்பந்தமாக தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, இரு சக்கர வாகனங்களில் வாகன ஓட்டி மட்டுமல்லாமல் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘கடந்த மாதம் 17-ந் தேதி வரை ஹெல்மெட் அணியாதது தொடர்பாக 10 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஹெல்மெட் விழிப்புணர்வால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர். இதன்காரணமாக ஹெல்மெட் அணியாதது தொடர்பாக பதியப்படும் வழக்கு பாதியாக குறைந்து உள்ளது’ என்று கூறப்பட்டிருந்தது.

இதைப்பார்த்த நீதிபதிகள்,   இருசக்கர வாகனங் களில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற அரசாணை முறையாக அமல்படுத்தப்படவில்லை என்று அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், ஹெல்மெட் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டும் போதாது என்றும் குறிப்பிட்டனர்.

பின்னர், தேசியக் கொடி பொருத்திய வாகனங்கள் வரும்போது சீருடையில் இருக்கும் காவல்துறையினர் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்துவது இல்லை என்று வேதனை தெரிவித்த நீதிபதிகள், காவல்துறையினர் ஹெல்மெட் அணிகிறார்களா? அதிகாரிகள் சீட் பெல்ட் அணிகிறார்களா? என்று கேள்வி எழுப்பி அதையும் கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பின்னர், வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று ஒத்தி வைத்தனர். இன்றைய தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது:-

கட்டாய ஹெல்மெட் சட்டத்தை  தமிழக  அரசு கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். சாலை விபத்து அதிகரிப்பதால் பின்னால் இருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும். 

மோட்டார் வாகன சட்ட விதிகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஹெல்மெட்டை கட்டாயமாக்கிய அரசாணையை அமல்படுத்துவது குறித்து அக்டோபர் 23ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்என் அ தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

Next Story