இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல்: தமிழக மீனவர்கள் 9 பேர் படுகாயம்


இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல்: தமிழக மீனவர்கள் 9 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 29 Sep 2018 9:37 PM GMT (Updated: 29 Sep 2018 9:37 PM GMT)

இலங்கை கடல் கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் தமிழக மீனவர்கள் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

நாகப்பட்டினம்,

நாகை அருகே உள்ள நாகூர் சம்பா தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 40). இவர் தனது படகில் 5 மீனவர்களுடன் நேற்று முன்தினம் நள்ளிரவு கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வெள்ளை நிற படகில் வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள், கண்ணன் உள்பட 6 பேரையும் சரமாரியாக தாக்கினர். மேலும் மீனவர்களின் படகில் இருந்த ஜி.பி.எஸ். கருவி, பேட்டரி, டார்ச் லைட், செல்போன், மீன்பிடி வலைகளை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.

தீவிர சிகிச்சை

இதையடுத்து மீனவர்கள் 6 பேரும் நாகை கடற்கரைக்கு வந்து சக மீனவர்களிடம் கடல் கொள்ளையர்களின் தாக்குதல் குறித்து தெரிவித்தனர்.

கடல் கொள்ளையர்கள் தாக்கியதில் 6 மீனவர்களும் படுகாயம் அடைந்தனர். அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மற்றொரு சம்பவம்

கீழையூர் அருகே உள்ள செருதூர் சிங்காரவேலர் குடியிருப்பை சேர்ந்த 3 மீனவர்கள் கோடியக்கரையில் இருந்து 18 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் நேற்று முன்தினம் இரவு மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

இவர்களையும் கடற்கொள்ளையர்கள் தாக்கி, ஜி.பி.எஸ். கருவி, பேட்டரி மற்றும் மீன்பிடி வலைகளை பறித்து சென்றனர். இதையடுத்து கரை திரும்பிய மீனவர்கள் 3 பேரும் உடனடியாக நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story