பஞ்சாப்பில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை: தமிழக ராணுவ வீரர் பலி மனைவி-குடும்பத்தினர் கதறல்


பஞ்சாப்பில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை: தமிழக ராணுவ வீரர் பலி மனைவி-குடும்பத்தினர் கதறல்
x
தினத்தந்தி 9 Oct 2018 9:00 PM GMT (Updated: 9 Oct 2018 9:00 PM GMT)

பஞ்சாப்பில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் தமிழக ராணுவ வீரர் பலியானார். அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

பத்மநாபபுரம்,

குமரி மாவட்டம் தக்கலை அருகே பருத்திக்காட்டு விளையை சேர்ந்த வேலப்பன் மகன் ஜெகன் (வயது 38). இவர் கடந்த 18 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும், தெற்குசூரங்குடி பகுதியை சேர்ந்த சுபி என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது சுபி 8 மாத கர்ப்பமாக உள்ளார்.

கடந்த மாதம் மனைவியை பார்ப்பதற்காக ஜெகன் ஊருக்கு வந்தார். விடுமுறை முடிந்து பஞ்சாப் மாநிலத்துக்கு பணிக்கு சென்றார். செல்லும் போது கர்ப்பிணி மனைவியை, தெற்குசூரங்குடியில் உள்ள சுபியின் பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு சென்றார்.

பலி

நேற்று முன்தினம் பஞ்சாப்பில் பயங்கரவாதிகளுக்கும், இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த சண்டையில் ஜெகனும் ஈடுபட்டு இருந்தார். அப்போது பயங்கரவாதிகள் சுட்டத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ஜெகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த தகவல் நேற்று முன்தினம் இரவு பருத்திகாட்டுவிளையில் உள்ள ஜெகனின் குடும்பத்தினருக்கு செல்போன் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜெகனின் மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

ஜெகனின் உடல் இன்று (புதன்கிழமை) சொந்த ஊர் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடும்ப பாரம் சுமந்தவர்

பலியான ஜெகனின் தந்தை வேலப்பன் ஏற்கனவே இறந்துவிட்டார். தாயார் சீதாலட்சுமி, ஜெகனுக்கு 2 சகோதரிகளும், ஒரு சகோதரனும் உள்ளனர். சிறு வயதில் இருந்தே குடும்ப பாரத்தை சுமந்த ஜெகன், இரண்டு சகோதரிகளையும் திருமணம் செய்து கொடுத்த பின்புதான் தனது 38-வது வயதில் திருமணம் செய்து கொண்டார். ஜெகன் இறந்ததால் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மட்டும் அல்லாமல் பருத்திக்காட்டுவிளை கிராம மக்களும் சோகத்தில் உள்ளனர்.

Next Story