கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர்: எடப்பாடி பழனிசாமிக்கு, சைதை துரைசாமி பாராட்டு


கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர்: எடப்பாடி பழனிசாமிக்கு, சைதை துரைசாமி பாராட்டு
x
தினத்தந்தி 11 Oct 2018 10:00 PM GMT (Updated: 11 Oct 2018 8:59 PM GMT)

கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவிப்பதாக சைதை துரைசாமி கூறினார்.

சென்னை,

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, உலக எம்.ஜி.ஆர். பேரவை சார்பில் 3 கோரிக்கைகளை வைத்திருந்தோம். அதில் சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்ட மத்திய அரசை வலியுறுத்த வேண்டும், கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்ட வேண்டும், முக்கியமான சாலைக்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்ட வேண்டும் என்று கோரியிருந்தோம்.

கோயம்பேடு பஸ் நிலையத்தை தொடங்க எம்.ஜி.ஆர். உத்தரவிட்டு இருந்தார். 1986-1987-ம் ஆண்டு இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். 1995-ம் ஆண்டு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 25 ஏக்கர் நிலம் ஒதுக்கினார். எம்.ஜி.ஆர். விருப்பப்பட்ட இடத்திலேயே பஸ் நிலையத்தை அமைத்து, ஜெயலலிதா திறந்து வைத்தார். ஆகவே அந்த பஸ் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்டுவது தான் பொருத்தமாக இருக்கும் என்று கூறினோம். எங்களின் கோரிக்கையை ஏற்று தான் ஒரு எம்.ஜி.ஆர். விசுவாசி என்பதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிரூபித்து, நிறைவேற்றியிருக்கிறார்.

திட்டங்களை கொண்டு வந்தவர்

திராவிட இயக்க வரலாற்றை பேசுகிறவர்களை எம்.ஜி.ஆர். அரியணையில் ஏற்றி வைத்தார். இதை அண்ணாவே கூறியிருக்கிறார். 1967 முதல் இன்று வரை திராவிட இயக்க தலைவர்கள் தான் முதல்-அமைச்சர்களாக இருந்து இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் முதல்-அமைச்சர்களாக வருவதற்கு எம்.ஜி.ஆர். தான் காரணம்.

சென்னை நகரில் பறக்கும் ரெயில் திட்டம் ஆனாலும் சரி பல்வேறு விதமான வளர்ச்சி பணிகள் என்றாலும் சரி அனைத்துக்கும் காரணகர்த்தாவாக இருந்தவர் எம்.ஜி.ஆர்., குடிசைமாற்று வாரியம், வீட்டு வசதித்துறை, சி.எம்.டி.ஏ., நெடுஞ்சாலைத்துறை, கல்வித்துறை, விளையாட்டு, உள்ளாட்சித்துறை, தமிழ்வளர்ச்சி என பல்வேறு துறைகளின் வாயிலாக எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். மக்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினார். அவர் கொண்டு வந்த அத்தனை திட்டங்களுக்கும் அவர் பெயரை வைப்பது தான் பொருத்தமாக இருக்கும்.

பாராட்டு

அந்தவகையில் எம்.ஜி. ஆரால் கொண்டு வரப்பட்ட கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு அவரது பெயரை சூட்டியது சிறப்புக்குரியது. இதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். எம்.ஜி.ஆர். பெற்றெடுத்த பிள்ளையான கோயம்பேடுக்கு அவர் பெயரை வைப்பது மட்டும் தான் பொருத்தமானது. அவர் பெயரை சூட்டுவதே தகுதியானது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story